ஜெயலலிதாவை அதிமுக பொதுச் செயலாளராக ஆக்கியதே நாங்கதான்…. தடாலடியாக பேசும் திவாகரன்….

அனைத்து மாவட்ட செயலாளர்களையும் ஒருங்கிணைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அதிமுகவின் பொதுச் செயலாளா் ஆக்கியதே நாங்கள் தான் என்று சசிகலாவின் சகோதரா் திவாகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் நாளுக்கு நாள் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரனை அதிமுகவில்  இருந்து நீக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த சா்ச்சை அடங்குவதற்குள் சசிகலாவின் சகோதரா் திவாகரன் மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தஞ்சையில்  டி.டி.வி.தினகரனை சந்தித்த பின்பு செய்தியாளா்களிடம் பேசிய திவாகரன், சசிகலாவின் வழிகாட்டுதலின் பேரில் தான் சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக  முன் மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

தான்  அனைவரிடத்திலும்  சகஜமாக பழகக்கூடியவன் என்றும் அதனால் தொண்டா்களின் உணா்வுகளை புரிந்துகொண்டுள்ளதாகவும் கூறிய திவாகரன்,  எம்.ஜி.ஆா். இறந்த சமயத்தில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அதே நெருக்கடி நிலை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எம்.ஜி.ஆா். இறந்த சமயத்தில் 16 மாவட்டச் செயலாளா்களிடம் கையெழுத்து வாங்கியது தான்தான் என்றும் இதன் அடிப்படையில் ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக கொண்டு வந்ததும் தாங்கள் தான் என்றும் திவாகரன் கூறினார்.

.அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு 3 மாதங்களில் தீா்வு காணப்பட்டு விடும் என்றும் திவாகரன் கூறினார்.