அதிமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நோட்டீஸ் கொடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட 4 பேர் கருணாசை சந்தித்துள்ளார்.

 

சாதி வெறி பேச்சு, எடப்பாடியை அடித்து விடுவேன், ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு ஊத்துவேன் என வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியதால் திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டு புழல், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவால் அது முடியாமல் போனது. பின்னர் ஜாமினில் வெளியே வந்த கருணாஸ், தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும், அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

கருணாசின் இந்த பேச்சால், கடுப்பாகி போயுள்ள அதிமுக தலைமை மற்றும் ஆளும் கட்சியினர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை தலைவர் தனபாலை சந்தித்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றதால் கட்சி தாவல் சட்டத்தின்படி அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. விரைவில் கருணாசுக்கு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாசை, டிடிவி தினகரன் ஆதரவாளரான அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, சென்னை சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அதிமுக பற்றியும் மத்திய அரசு பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த பேட்டிக்குப் பிறகே கருணாஸ் மீது, எடப்பாடி தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாசை, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அப்போது கூறப்பட்டது.