சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுதும் காலியாக கிடந்தால், தமிழர்களின் உணர்வுகளையும் வலிமையையும் உலகமே திரும்பி பார்க்கும் என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவருகிறது.

தமிழர்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி கொண்டிருக்கும் வேளையில், ஐபிஎல் கொண்டாட்டம் கூடாது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்ற குரல் வலுத்துவருகிறது. அப்படி போட்டி நடத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா தலைமையில், சத்யராஜ், செல்வமணி, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர்பச்சன், கௌதமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ஐபிஎல் போட்டியை தமிழகம் புறக்கணித்தால், போட்டி நடைபெறும்போது மைதானமே காலியாக இருக்கும். மைதானமே காலியாக இருந்தால், தமிழர்களின் உணர்வுகளையும் வலிமையையும் வலியையும் உலகமே திரும்பி பார்க்கும். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் தன்னிச்சையாக திரண்ட தமிழர்கள், காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தாமாக முன்வந்து தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.