director pa ranjith praises nayanthara for aram movie but not the director gopi nayinar
அறம்... இப்போதைய பேசு பொருள். வெகு காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்த கதை சொல்லும் படம் என்று பேர் வாங்கியிருக்கிறது. அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சமூகத்தின் பார்வையை பலப்படுத்தச் சொல்லும் ஒரு இயக்குனர் அசராத படைப்பு என்று ரசிகர்கள் பலர் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நயன்தாராவுக்கு என்ன பாராட்டு கிடைக்கிறதோ அதை விட ஒரு படி மேலே இயக்குனருக்கு அந்தப் பாராட்டும் போய்ச் சேர்ந்திருக்கிறது.
ஆனால், அண்மைக் காலமாக ரஜினியை இயக்கிவிட்டு அதிகம் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பா.ரஞ்சித், திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'அறம்' திரைப்படத்தை வாழ்த்தி பதிவிட்ட ஒரு டுவீட் அவரது எண்ணத்தை வெளிக்காட்டியுள்ளது. இயக்குநர் கோபி நயினார் இயக்கிய படம் 'அறம்'. மாவட்ட ஆட்சித் தலைவர் வேடத்தில், மதிவதனி என்ற கதாபாத்திரத்தில், பாராட்டும் படியாக நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்தப் படம் நல்ல பாராட்டைப் பெற்றிருப்பதுடன் வசூல் வகையிலும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இந் நிலையில் அறம் படத்தை வாழ்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்ட ஒரு ட்வீட், அவரது உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பா.ரஞ்சித் தன் டிவிட்டர் பதிவில், '#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர் நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்' என்று தெரிவித்துள்ளார்.
ஒரு இயக்குனராக இருந்துகொண்டு, சக இயக்குனர் பெயரை சொல்லி பாராட்டுவதை விட்டுவிட்டு, பா.ரஞ்சித் தனது பதிவில் அறம் இயக்குனர் கோபி நயினார் பெயரை குறிப்பிடாமல், நடிகை நயன்தாரவை 'தோழர் நயன்தாரா' என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் பா.ரஞ்சித்துக்கு கண்டனங்கள் பதியப்பட்டு வருகின்றன. இயக்குநர் ரஞ்சித்தின் இரண்டாவது படமான 'மெட்ராஸ்' திரைப்படத்தின் சில காட்சிகள், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பாதியிலேயே நின்று போன 'கறுப்பர் நகரம்' என்ற படத்தின் காட்சிகள்தான் என்ற சர்ச்சை முன்னர் உருவானது. இது தொடர்பாக அப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய இந்த ட்வீட்டின் மூலம் மீண்டும் சர்ச்சையை பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர்&படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
— pa.ranjith (@beemji) November 12, 2017
