இதற்கான காரணம் என்ன, அவர்கள் கடிதத்தில் என்ன எழுதியிருந்தார்கள், எதைக்குறிப்பிட்டார்கள், யார் வழக்கு தொடர்ந்தது இது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.
கும்பல் வன்முறை

மத்தியில் பாஜக ஆட்சிக்குபின் பசுக் காவலர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்வர்களை தாக்குவது, பசுமாடுகளை விற்பனைக்கு கொண்டு செல்பவர்களைத் கும்பலாகத் தாக்கி கொலை செய்தல், தனிமனிதர்கள் மீது தாக்குதல், சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் போன்ற சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சியாக நடந்து வந்தன.

பிரதமர் மோடி 2-வது முறையாக ஆட்சிக்குவந்தபின்பும் பசுக்காவலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள், கும்பல் வன்முறைகள் சிறுபான்மையினர் மத்தியிலும், மதச்சார்பின்மையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடிதம்

இதையடுத்து இயக்குநர் மணிரத்னம், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, அபர்னா சென், நடிகை ேரவதி, நடிகை சவுமித்ரா சாட்டர்ஜி, சமூகசேவக் பினாயக் சென்,ஆஷிஸ் நந்தி உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் 23-ம் ேததி கடிதம் எழுதினார்கள்.

அந்த கடிதத்தில் “ இந்த தேசத்தில் சமீபகாலமாக முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்துக் கொல்வதை உட னடியாக கண்டிப்பாக நிறுத்த வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.

அதேபோல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடை பெறுகின்றன. இவற்றைத் தடுக்க நீங்கள் நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசினீர்கள் தடுக்க என்ன நடவடிக்க எடுத்தீர்கள். கருத்து வேறுபாடு கொண்டவர்களை தேச விரோதி என்றும், நகர நக்சல்கள் என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது இவற்றைப் பார்க்கும் போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வழக்கு

இந்த கடிதம் குறித்து பிஹார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம்தேதி முசாபர்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் திவாரி இந்த 49 பிரபலங்கள் மீதும் எப்ஆர்ஐ பதிவு செய்ய உத்தரவிட்டார்.

தேசத்துரோக வழக்கு

இதையடுத்து, முசாரப்பூரில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது