உள்ளாட்சி தேர்தல் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி...! 

எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் தரப்படவேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக கவுன்சிலர் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் இன்று  628 பயனாளிகளுக்கு ரூ 60 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். 

அதன் பின் பேசிய அமைச்சர் சீனிவாசன்,

"கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளி போவதற்கு அதிமுக அரசு மட்டும் காரணம் அல்ல....எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலமாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

எப்படி சட்டமன்ற உறுப்பினர்களால்  முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அதே போல் எம்பிக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது போல தான் இந்த திட்டம் போடப்பட்டது. இது அதிமுகவுக்காக மட்டும் போடப்பட்ட சட்டம் அல்ல. இந்த சட்டம் அனைத்து கட்சிக்கும் பொருந்தும். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட  உள்ளது; மக்களை ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என தெரிவித்து உள்ளார்.