திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன் மற்றும் திண்டுக்கல் லியோனி ஆகியோர் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்  துரைமுருகன் அறிவித்துள்ளார். 

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஆ.ராசா, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல், அமமுகவில் இருந்து விலகி, கடந்த 2019-ம் ஆண்டு, ஜூன் மாதம் திமுகவில் இணைந்த தங்க. தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் புதிய கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- 'திமுக கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.இராசா, எம்.பி., அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும், தங்க.தமிழ்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்களை கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக, ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களுடன்

திமுக சட்டதிட்ட விதி  கழக சட்டதிட்ட விதி:18, 19-ன் படி  திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல். முனைவர் சபாபதி மோகன், கடலூர் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.