கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, இரு அணிகளையும் ஒருங்கிணைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று, சசிகலா ஆதரவு அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் உணர்ந்து விட்டனர்.

கட்சியின் பெயரும், சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி கலைக்கப்பட்டால், வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெறுமா? என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.பி.வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, ஓ.பி.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறது.

இந்த முயற்சிக்கு, தினகரன் தடையாக இருப்பார் என்பதால், அவரும், அவரது குடும்ப ஆதிக்கமும் இல்லாத அதிமுகவை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தினகரனை கட்சியை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இது  பாஜக விரும்புவதுபோல சசிகலா குடும்பத்தினர் அல்லாத, அதிமுகவை கட்டமைக்கும் முயற்சியாகும். இதற்கு, சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களான ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் அனைவருமே ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாகவே, கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், தினகரனை துணை பொது செயலாளர் பதவியை விட்டு ஒதுங்குமாறு வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், பன்னீருக்கே மக்கள் ஆதரவு இருப்பதால், அவரையே பொது செயலாளர் ஆக்குவது என்றும், முதல்வர் எடப்பாடி அப்படியே தொடர்வது என்றும், ஏழு பேர் கொண்ட வழிகாட்டு குழு ஒன்றை அமைத்து அதன்மூலம் ஆட்சி மற்றும் கட்சியை நிர்வகிப்பது என்றும் ஐவர் குழு முடிவு செய்துள்ளது.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகிவற்றை மீட்பதுடன், வரப்போகும் தேர்தலில், அதிமுகவை வெற்றிபெற வைக்க முடியும் என்று ஐவர் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனவே, தினகரன் எந்த நேரமும் அதிமுகவை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.