ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் திமுகவின் துரை முருகன் பேட்டியை ஒளிபரப்பியது குறித்து டி.டி.வி.தினகரனுக்கும், அந்த சேனலின் சிஇஓ விவேக் ஜெயராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனக்கு தெரியாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதால் டி.டி.வி.தினகரன் நொந்து போயுள்ளார் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணிக்கு ஜெயா ப்ளஸ் செய்தி சேனலை  பார்த்த  அனைவரும் சற்று திகைத்துத்தான் போயினர். ஜெயலலிதாவின் பரம வைரி என கருதப்படும் திமுக தலைமை நிலைய செயலாளர் துரை முருகனின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

கருணாநிதி, திமுக, ஸ்டாலின் என அந்த தரப்பு செய்திகளோ, காட்சிகளோ ஜெயா தொலைககாட்சியில் ஒரு போதும் ஒளிபரப்பப்பட்டது கிடையாது. ஜெயலலிரதா உயிருடன் இருந்தவரை அதற்கு அனுமதி என்பதே கிடையாது.

இந்நிலையில்தான் அண்மையில் பிரதமர் மோடி,  கோபாலபுரத்தில் திமுக தலைவர் தலைவ்ர் கருணாநிதியை சந்தித்துப்  பேசிய செய்தி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இது பெரும்பாலான அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கே அதிர்ச்சி அடைந்த தொண்டர்களுக்கு மேலும் பெரிய ஷாக் கொடுத்தது துரைமுருகன் பேட்டி.

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த ரெய்டு, எடப்பாடி ஆட்சி என பேட்டியில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார் துரைமுருகன்.

இந்தப் பேட்டியை டிவியில் பார்த்து டென்ஷன் ஆகிவிட்டாராம் டிடிவி தினகரன். ரெய்டுக்குப் பிறகு விவேக்கிடம் பேசாமல் இருந்த தினகரன், நேற்று இரவு அவரோடு பேசிஇருக்கிறார்.

அப்போது என்ன நினைச்சுட்டு இருக்கே உன்னோட மனசுல...  துரைமுருகன் பேட்டி  அரை மணிநேரம் நம்ம சேனல்லில் வருது. எடப்பாடிக்கும் நமக்கும் ஆயிரம் பிரச்னைஇருக்கலாம். அதுக்காக நீ துரைமுருகன் பேட்டியை சேனல்ல போடுவியா? துரைமுருகனை பத்தி என்ன தெரியும் உனக்கு? அவரு எதாவது ஏடாகூடமா பேசி இருந்தா என்னஆகுறது? இனிமேல் எனக்கும் ஜெயா டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொல்லிடவா?’ என்று கோபத்தில் எகிறிவிட்டாராம்.

அதற்கு விவேக், ‘அவரு நமக்கு ஆதரவாகத்தான் பேசினாரு.  அதனால்தான் போடச்  சொன்னேன்...’ என்று சொல்லி இருக்கிறார்.

‘ஆமா துரை முருகன் அப்படித்தான் பேசுவாரு… ..  நாம எல்லோரும் அடிச்சுக்குறது  அவங்களுக்கு கொண்டாட்டமா தான் இருக்கும் … அதனால அவரு பேசுவாரு.. அதுக்காக அவரு பேட்டியை நீ போட்டுருவியா? இது சின்னம்மாவுக்கு தெரியுமா?’ என சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுக்க  விவேக் அமைதியாகவே இருந்தாராம்…

தொடர்ந்து  பேசிய டிடிவி தினகரன் ‘நீ பேச மாட்டேன்னு  எனக்குத் தெரியும்’  என்று  சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம் தினகரன்.

துரை முருகனின் பேட்டி தொண்டர்களை மட்டுமல்லாமல் எடப்பாடி உள்ளிட்ட பெருந்தலைகளை அதிர்ச்சி அடையச் செய்ததாம். விவேக் தரப்பினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அவரும் பொங்கி தீர்த்துவிட்டாராம்.

டி.டி.வி.தினகரன் – விவேக் இடையே ஏற்கனவே பனிப்போர் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனை அவர்கள் இடையே மேலும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதப்படுகிறது.