Dinakaran Supporters Will meet sasikala at Parappana Agrahara

பரபரப்பான அரசியல் சூழலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சந்திக்க உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வர் பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்டதன் விளைவாக தினகரன் ஆதரவாளர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் மீதான பழைய வழக்குகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கழற்றிவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க நினைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. 

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய ஸ்டாலின் மனு மற்றும் தகுதிநீக்கம் செல்லாது அறிவிக்கக்கோரிய எம்.எல்.ஏக்களின் மனு ஆகியவை மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் குடகில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், இன்று சசிகலாவை எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், இன்று எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எம்.எல்.ஏக்களுக்கு சசிகலா ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவை சிறையில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.