Dinakaran Supporter Vetrivel raise against Edapadi palanisamy

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை அறிவித்த பாஜக, அதற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடியை நேரடியாக தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். பன்னீர் அணிக்கும் ஆதரவு கோரப்பட்டது.

ஆனால் சசிகலாவிடமோ, தினகரனிடமோ பாஜக தலைவர்கள் நேரடியாக ஆதரவு கோரவில்லை. அதேசமயம், தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் ஆதரவு கோரப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம், தம்பிதுரை, தினகரன் ஆகியோர் பெங்களூரு சிறைக்கு சென்று சந்தித்து பேசினார். பின்னர் பேசிய தினகரன், குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு குறித்து சசிகலா அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

ஆனால், அதே சமயத்தில் எம்.எல்.ஏ க்கள் ஆலோசனை கூட்டம் நடத்திய எடப்பாடி, கூட்டத்திற்கு பின்னர், அதிமுக எம்.எல்.ஏ க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அறிவித்தார்.

முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் யாரும் கலந்து கொள்ளாததால், பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்த, அவரது தீவிர ஆதரவாளர் வெற்றிவேல், குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை சசிகலா அறிவிப்பார் என்று கூறினார்.

மேலும், கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் பாஜகவுக்கு ஆதரவு என முதல்வர் அறிவித்தது செல்லாது என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம், சசிகலாவின் ஒப்புதல் இல்லாமலே எடப்பாடி, தன்னிச்சையாக பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே, சசிகலா, தினகரன் ஆகியோரின் பிடி கட்சி மற்றும் ஆட்சியில் தளர்ந்து, முதல்வர் எடப்பாடியின் கை ஓங்கியுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம், தொண்டர்களை விட்டு வெகு தூரம் விலகிவிட்ட கட்சி மற்றும் ஆட்சியில் யாருடைய செல்வாக்கு அதிகரித்தால் என்ன? நடப்பது எதுவுமே நல்லதாக இல்லை என்றே அதிமுக தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.