dinakaran supporter pugazhendhi appear in income tax office

தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தி, வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 9-ம் தேதி 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்டது.

5-வது நாளாக இன்று, விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீடுகள், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 9-ம் தேதி, அதிரடியாக தொடங்கிய சோதனை புயலில் தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தியும் சிக்கினார். பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கடந்த 9-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின.

இதையடுத்து அந்த ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை புகழேந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புகழேந்தி இன்று ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.