அ.தி.மு.க இரண்டாக பிரிந்திருந்த போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. அந்த சின்னத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று இருந்த தினகரன் அரசியல் புரோக்கர் சுகேஷ் மூலமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த டி.டி.வி டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.

வழக்கில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டி.டி.வி தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட டி.டி.வியின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பின்னர் டெல்லி போலிஸ் தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் டி.டி.வி பெயர் இடம் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என்றே தினகரன் காத்திருந்தார்.

ஆனால் தினகரன் மீதான லஞ்ச குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழக்கை தினகரன் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 6ந் தேதி விசாரணைக்கு டி.டி.வி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பிறகு தினகரன் செயல்பாடுகள் திடீரென வேகம் குறைந்துள்ளது.

கஜா புயல் விவகாரத்தை கையில் எடுத்து ஸ்டாலின் படம் காட்டிக் கொண்டிருந்த நிலையில் தினகரனோ வீட்டில் முடங்கியிருந்தார். பின்னர் ஒரு வழியாக புறப்பட்டு புயல் பாதித்த பகுதிகளுக்கு தினகரன் சென்ற நிலையிலும் சம்பிரதாயத்திற்கு அங்கு சிலருக்கு உதவிகளை கொடுத்துவிட்டு திரும்பினார். தனது புயல் பாதிப்பு விசிட் தொடர்பான செய்திகள் கூட அவ்வளவாக வெளி வராமல் தினகரனே பார்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

டிசம்பரில் இரட்டை இலை சின்ன வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் தினகரன் தனது செயல்பாடுகளில் சுணக்கத்தை ஏற்படுத்தி டெல்லியில் யாருக்கோ தூது விடுவதாக கூறப்படுகிறது.