Dinakaran sad bad against Edapadi palanisamy and panneerselvam Activities

திகார் சிறைக்கு சென்று வந்த பின்னர், முதல்வர் எடப்பாடி உள்பட அனைத்து அமைச்சர்களும், தினகரனை ஒதுக்கி விட்டனர். துணை பொது செயலாளராக இருந்தும், அவர் கட்சி அலுவலகத்தில் நுழைய முடியாமல் தவிக்கிறார்.

குடும்ப உறவுகளும் திவாகரன் தலைமையில், தினகரனுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறது. சிறையில் இருப்பதால், சசிகலாவும் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.

அதனால், கட்சியிலும், ஆட்சியிலும் தமது செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் எம்.எல்.ஏ க்களை தமக்கு ஆதரவாக தினகரன் அணி திரட்டினாலும், அமைச்சர்கள் மூலம் அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து மீண்டும் தம் பக்கம் திருப்பி விட்டார் எடப்பாடி.

இதனால் வெறுத்து போன தினகரன், பன்னீர் முதுகில் குத்தினார், எடப்பாடி நெஞ்சில் குத்தி விட்டார் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது, சார், சார் என பூனை குட்டி போல சுற்றி சுற்றி வந்த பன்னீருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்து அமைச்சர் ஆக்கினேன்.

ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி வந்தபோது, பன்னீர் முதல்வர் ஆவதற்கும் காரணமாக இருந்தேன். ஆனால், அவர் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் முதுகில் குத்தி விட்டு சென்று விட்டார்.

சசிகலா சிறை செல்லும் தருவாயில், நானே முதல்வர் ஆகி இருக்கலாம். ஆனால், நமக்கு விசுவாசமாக இருக்கிறாரே என்று நானே பரிந்துரை செய்து எடப்பாடியை முதல்வர் ஆக்கினேன்.

நான் முதல்வர் ஆகவேண்டும் என்று நினைத்து இருந்தால், அப்போதே முதல்வர் ஆகி இருக்கலாம். அதை விட்டதுதான் தவறாக போய்விட்டது.

எவ்வளவோ எதிர்ப்பு மற்றும் நெருக்கடிகளை எல்லாம் சந்தித்து, கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களை எல்லாம் பாதுகாத்து, எடப்பாடியை முதல்வர் ஆக்கினோம்.

அவரும், ஆரம்பத்தில் பன்னீரை போல விசுவாசம் காட்டி நடித்துவிட்டு, கட்சியின் துணை பொது செயலாளராக இருக்கும் என்னையே, தற்போது கட்சி அலுவலகத்தில் கூட நுழைய முடியாமல் செய்துவிட்டார்.

நான் மட்டும் இல்லை என்றால், பன்னீரும், எடப்பாடியும் முதல்வர் பதவியை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க முடியுமா?. அப்படி இருந்தும் இருவருமே துரோகம் இழைத்து விட்டனர்.

பன்னீர்செல்வம் முதுகில் குத்தினார் என்றால், எடப்பாடி நெஞ்சில் குத்தி விட்டார் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன் மிகவும் வருத்தப்பட்டதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.