தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என சொல்ற நீங்க, மத்திய அரசிடம் சொல்லி தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள், மலைப்பகுதிகளை பயிற்சிக் களமாக அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றனர். கூடிய விரைவில் தமிழகம் கலவர பூமியாக மாறும். நக்சலைட்டுகள் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் தங்களுடைய தீவிரவாத ஆட்சியை நிலைநிறுத்தப் போகிறார்கள்" என்று  ஒரு பகீர் தகவலை வெளியிட்டார்.

இதனையடுத்து  போன்னருக்கு பதிலடி கொடுத்த தினகரன், "இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்தியிலிருந்து எதைச் சொன்னாலும் கேட்பார்கள். பதில் சொல்வதற்கு தகுதி இல்லாத அடிமை அரசாங்கமாக இது உள்ளது. ஆகவே தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் கேள்விக்கு இங்குள்ளவர்கள் பதில் சொல்லமாட்டார்கள்.

ஆனால் நான் என்ன கேட்கிறேன் என்றால், மத்திய அரசுதானே இந்த மக்கள் விரோத அரசாங்கத்தை தாங்கிப் பிடித்துள்ளது. மத்திய அரசிடம்தான் ரா உளவுப் பிரிவு உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று கூறும் மத்திய அமைச்சர் ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

மத்திய அமைச்சரின் சீரியஸான கருத்துக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அவரின் கருத்தை உண்மை என்று இவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே. அப்படியென்றால் மத்திய அரசுதானே ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மத்திய அரசிடம் பேசி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாமே?" என்று தெரிவித்தார்.