டி.டி.வி தினகரனுக்கு எதிராக சமீப காலங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருப்பது ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க.வில் இனி சசிகலா குடும்பத்திற்கு இடம் இல்லை என்கிற ஒற்றை கோசத்துடன் கடந்த ஆண்டு ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தன. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ் தங்களை தாங்களே அறிவித்துக் கொண்டனர். அதன் பின்னர் அ.தி.மு.க – டி.டி.வி தினகரன் இடையே மோதல் வெடித்தது.

 

தஞ்சையில் பேசிய டி.டி.வி தினகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 420 என்று மிக கடுமையாக விமர்சித்தார். அதற்கு யார் 420 என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று முதலமைச்சர் பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான மேடைகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது டி.டி.வி தினகரனுக்கு பதிலடி கொடுத்து வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை மட்டும் இல்லை அவரதுதந்தையை கூட தினகரன் விமர்சித்து வருகிறார். கல்லாப் பெட்டி சிங்காரம், ஊழலின் ஊற்றுக் கண் என்றெல்லாம் தற்போது மேடைகளில் எடப்பாடி பழனிசாமியை தினகரன் விமர்சித்து தெறிக்கவிடுகிறார். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே தினகரன் எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டில் இருந்து ஈ.பி.எஸ் விலகிவிட்டதாக தெரிகிறது. 

எந்த மேடையிலும் தினகரனை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பதில்லை. ஏன் அவர்களை பற்றி பேசுவது கூட கிடையாது. முன்பெல்லாம் எந்த கொம்பனாலும் அ.தி.மு.க அரசை கலைக்க முடியாது என்று பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  பேசுவார். ஆனால் தற்போதெல்லாம் யாராலும் அ.தி.மு.க அரசை அசைக்க முடியாது என்று தனது காட்டத்தை குறைத்துக் கொண்டுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக மன்னார்குடியில் டி.டி.வி தினகரன் நடத்திய கூட்டத்திற்கு போட்டியாக அமைச்சர் காமராஜ் நடத்திய பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பி.எஸ் மட்டுமே கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து பேசிய போது, தான் பங்கேற்க விரும்பவில்லை என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே அமைச்சர் காமராஜிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தான் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்திருந்தார் தினகரன். 

ஆனால் அதற்கு போட்டியாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க கூட எடப்பாடி முன்வராதது தான் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை சந்தேகம் அடையவைத்துள்ளது. எங்கே மீண்டும் அ.தி.மு.கவில் தினகரனை இணைக்கும் முயற்சி நடைபெறுகிறதோ என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய ஓ.பி.எஸ்., கட்சியில் மீண்டும் தினகரனை இணைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அ.தி.மு.கவில் கடந்த 10 நாட்களாகவே சலசலப்பு நிலவுகிறது.