சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் எப்படியாவது வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற தினகரனின் எண்ணத்தில் தேர்தல் ஆணையம் மண்ணைப் போட்டுவிட்டது.

இந்நிலையில் எனக்கு கிடைக்காதது உனக்கும் கிடைக்கக்கூடாது என முடிவெடுத்துள்ள தினகரன், எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகுளும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராக முயன்றார். இதற்காக ஓபிஎஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

முதலமைச்சர் கனவில் இருந்த சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆப்பு வைத்தார். அவர் தூக்கிய போர்க்கொடியால் முதலமைச்சராக பதவி ஏற்கவிருந்த சசிகலாவுக்கு வாய்ப்பு கை நழுவிப் போனது. ஆனால் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜெயிலுக்கு போவதற்குமுன் டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக்கினார்.எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார்.

இதனிடையே ஆர்,கேநகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்லில் போட்டியிட்டு முதலமைச்சராகலாம் என தினகரன் நினைத்திருந்தார். ஆனால் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் அதுவும் முடியாமல் போனது.

அது மட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தை திரும்பப்பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைவது என முடிவு செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் சசசிகலா குடும்பத்தினரை நீக்கி வைப்பது என முடிவுசெய்து, இணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு கட்டமாகத்தான் ஒரு சில எம்எல்ஏக்கள் தினகரன் எண்ணப்படி நடந்து கொள்வதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே நாஞ்சில் சம்பத் தினகரனுக்கு 87 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பேட்டி அளித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு இரு அணிகள் இணைந்தாலும் தினகரன்தான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என அதிரடியாக தெரிவித்தார்.

இப்படி தினகரன் தனக்கென ஒரு லாபியை உருவாக்கி வைத்திருப்பதால் இரு அணிகள் இணைந்து செயல்பட தொடங்கினால், அடுத்த நடவடிக்கையாக ஆட்சிக் கவிழ்ப்பு இருக்கலாம் என  தெரிகிறது.

எனக்கு கிடைக்காதது உனக்கும் மட்டும் எப்படி? என்ற கோட்பாட்டின்படி அடிப்படையில் நிச்சயம் ஆட்சிக் கவிழ்ப்பு விரைவில் இருக்கும் என்கிறது விபரம் அறிந்த வட்டாரங்கள்…