Asianet News TamilAsianet News Tamil

இரட்டை இலை எம்ஜிஆரிடம் தான் இருக்கணும்.. நம்பியாரிடம் அல்ல..! தினகரன் பஞ்ச்..!

dinakaran opinion about rk nagar results
dinakaran opinion about rk nagar results
Author
First Published Dec 24, 2017, 11:29 AM IST


இரட்டை இலை எம்ஜிஆரிடமோ ஜெயலலிதாவிடமோ இருக்க வேண்டுமே தவிர நம்பியாரிடம் அல்ல என தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார். ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இதுவரை நடந்துள்ள மூன்று சுற்றுகளின் முடிவில் 8835 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார். தினகரன் 15868 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் 7033 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 3750 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையை இழந்து தனித்துவிடப்பட்ட தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்பேன் என தினகரன் சூளுரைத்தார்.

மூன்று சுற்று முடிவில், மதுசூதனனைவிட 8835 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் எம்ஜிஆரிடமோ ஜெயலலிதாவிடமோ தான் இருக்க வேண்டுமே தவிர நம்பியாரிடம் அல்ல என தெரிவித்தார். ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலையை பழனிசாமி தரப்பிடமிருந்து மீட்பேன் என தினகரன் சூளுரைத்த நிலையில், இன்று இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் எண்ணங்களை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பிரதிபலித்துள்ளனர். அவிநாசி, கோவை, குமரி.. இவ்வளவு ஏன்? கேரளா எல்லையிலும் என நான் சென்ற இடமெல்லாம் குக்கர் சின்னம் தான் ஆர்.கே.நகரில் வெற்றி பெறும் என மக்கள் என்னிடம் கூறினர். அந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சின்னத்தை பொறுத்து வெற்றி கிடையாது. வேட்பாளர் யார் என்பதை பொறுத்துத்தான் சின்னத்திற்கு மரியாதை. கட்சியும் சின்னமும் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஜெயலலிதாவிற்கு அடுத்து ஆர்.கே.நகரில் யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை ஆர்.கே.நகர் மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என தினகரன் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios