தமிழகம் மட்டுமில்லாமல் புதுவையிலும் கூட அ.தி.மு.க.வுக்கு எதிராக அதிரடி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார் தினகரன். அதே வேளையில் கனவிலும் கூட அவர் அரசியல் வெற்றி பெறக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஓடுகிறார் எடப்பாடியார்.
 
ஆனால் ஒரேயொரு தொகுதியில் மட்டும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு குறிப்பிட்ட நபரை குதறி எடுக்கின்றனர். அது....ஒன்  அண்டு ஒன்லி செந்தில்பாலாஜியைத்தான். 

அ.தி.மு.க.வின் எதிரி எனும் முறையில் செ.பா.வை எடப்பாடியார் எதிர்க்க, தன்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்த துரோகி எனும் கோபத்தில் அவர் மீது கடும் காண்டில் இருக்கிறார் தினகரன். ஆக பொது எதிரியான செ.பாலாஜிக்கு எதிராக எடப்பாடி தரப்பும், தினகரன் தரப்பும் கிட்டத்தட்ட ரகசிய ஒப்பந்தம் போட்டப்படி  பிய்த்து எறிகிறார்கள் பிரசாரத்தில்.
 
இடைத்தேர்தலில் செ.பா.வை தோற்கடித்தே தீருவது என்று கடந்த நான்கைந்து மாதக்கணக்கில் அரவக்குறிச்சி தொகுதியில் அநியாயத்துக்கு உழைத்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். புகழூரை தாலுகாவாக்கியது, காவிரி ஆற்றில் செக் டேமிற்கு அடிக்கல் நாட்டியது என்று இந்த தொகுதிக்குள் நலத்திட்டங்களை நறுக் நறுக்கென்று கிள்ளிப்போட்டு, மக்களை திருப்பியுள்ளார்.
 
அதேவேளையில் அரவக்குறிச்சி தொகுதிக்குள்ளிருக்கும் இஸ்லாமிய சமுதாய வாக்குகள் தன்னை தெளிவாக வந்தடையும் என்று நம்பினார். ஆனால் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார் தினகரன். சாகுல் ஹமீது எனும் இஸ்லாமியரை அங்கே களமிறக்கிட, தி.மு.க.வினர் கூட இவருக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்ப்பதால் கண்கள் சிவந்து கிடக்கிறாராம் செந்தில் பாலாஜி.
 
அரவக்குறிச்சியில் தினகரனுடன் எடப்பாடியார் டீம் கைகோர்த்து குறிவைத்திருக்கும் ‘ஆபரேஷன் செந்தில்பாலாஜி’ கைகொடுக்குமா?....
கவனிப்போம்!