எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த டிடிவி.தினகரனுக்கு அதிகாரமே கிடையாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

அதிமுகவில் இரு துருவங்களாக இருந்த அணியினர் தற்போது, ஒன்று சேரும் நிலை உருவாகியுள்ளது. இதுபற்றி அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதுவும் தெரியாது என கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதால், இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியும் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இரு அணிகளும் இணைவதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையில், இந்த அணிகள் இணைவதற்கு, அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துகளை கேட்டு, டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரையிடம், செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “ஒரு கட்சியில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்கு அவை முன்னவருக்கும், அவை தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.

ஆனால், எம்எல்ஏக்கள் கூட்டமோ, மாவட்ட செயலாளர்கள் கூட்டமோ நடத்த துணை பொது செயலாளருக்கு அதிகாரம் இல்லை. அந்த சட்ட விதிகளின்படி பார்க்கும்போது, டிடிவி.தினகரனுக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அதிகாரமே இல்லை” என்றார்.