ஜெயலலிதா அறிவித்த தாய் சேல நலப்பெட்டகம் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்வு செய்ததாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் விளக்கியுள்ளார். 

டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டள்ளது. அதன்படி டி.டி.வி.தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், பரிசுப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பேசிய அவர், ’’தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் அடங்கிய பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கோரியது. அதற்காக 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பியது. அதில் பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தோம். ஜெயலலிதா அறிவித்த தாய் சேல நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தேன். மிகப் பெரிய போராட்டத்திறகு பிறகு பரிசு பெட்டகம் சின்னம் கிடைத்துள்ளது. 

இந்த சின்னம் கிடைத்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி உடனடியாக சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சின்னம் கிடைக்க கூடாது எங்களுக்கு சின்னம் கிடைக்க கூடாது என்பதற்காக அதிமுக பெரிய அளவில் கஷ்டப்பட்டது. ஆனால் அவர்களால் அப்படி எதுவும் கெட்டது முடியவில்லை. அதிமுக எங்களை கட்டுப்படுத்த பார்க்கிறது. இன்று கூட என் ரூமில் சோதனை செய்தார்கள். இப்போது சோதனைகளை செய்து எங்களை முடக்க பார்க்கிறார்கள். இந்த அரசு மிகவும் சீப்பாக நடந்து கொள்கிறது.

அமைச்சர் ஜெயக்குமார் எப்படி பேசுகிறாரோ, அதற்கு எதிராகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர் அப்படி பேசுவது எங்களைப் பொறுத்தவரை நல்ல சகுனம்தான்’’ என அவர் தெரிவித்தார்.