dinakaran deep discussion with party cadres

தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி வேறு வேலையை அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார் தினகரன். அது ஆர்.கே.நகர் தேர்தல் வேலை அல்ல. அப்ப எதுக்கு பொறுப்பாளர் நியமனம். இது சம்பந்தமாக கட்சி நிர்வாகி ஒருவர் வாயை கிண்டினோம்....

நேற்று கட்சியின் நிர்வாகிகள் , புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டினார் தினகரன். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏதோ ஆர்.கே.நகர் தேர்தல் விவகாரம் என்று நினைத்து தான் கூட்டத்திற்கு வந்துள்ளனர். ஆனால் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயமே வேறு என்கிறார் கூட்டத்துக்கு சென்று வந்த நிர்வாகி ஒருவர்.

அப்படி என்னதான் பேசப்பட்டது. வாயை கிண்டினோம். அட எவ்வளவோ பேசினாங்க என்னத்த சொல்ல என்றார். உங்களுக்கு என்ன வேலை கொடுத்துள்ளார்கள் அதை சொல்லுங்கள் என்றோம்.தேர்தல் பற்றி ரெண்டு மூன்று வரி பேசியிருந்தால் பெரிய விஷயங்க கூட்டத்தோட முக்கிய அஜெண்டாவே வேறங்க என்றார்.

அது என்ன வேறு அஜெண்டா என்றோம். அதுவா ஓபிஎஸ் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டபோது சாதாரணமாக போய்விடுவார் என்று கணக்கு போட்டது எத்தனை பெரிய தவறுன்னு ஒவ்வொரு செயலிலும் நிருபிச்சுக்கிட்டே வர்றாங்க. இவங்க ஒவ்வொரு தடவையும் தும்பை விட்டு வாலை பிடிக்கிறார்கள் , இந்த கூட்டமௌம் அது போன்ற கூட்டம் தான் என்றார்.

என்னத்த தும்பை விட்டு வாலை பிடிக்கிறார் என்றோம். அட விவரமில்லாதவரா இருக்கீங்களே . ஓபிஎஸ்சை விரட்டியதிலிருந்து , தீபாவை கையாண்டதிலிருந்து , கட்சி சின்னத்தை கோட்டை விட்டது வரை எத்தனை இருக்கு எதை சொல்லன்னு கேட்டார்.

கட்சி சின்னத்தை யாருக்கு வழங்குவது அல்லது முடக்குவதா எனபதிலும் , பொதுச்செயலாளர் தேர்வு விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் குழப்பத்தில் தானே இருந்தது. அது எப்படி தீர்ந்தது. 43 லட்சம் பிரமாண பத்திரத்தை கொண்டு போய் ஓபிஎஸ் தரப்பு அடுக்கியதும் தேர்தல் ஆணையம் ஆடிப்போச்சு.

அதுக்கு பிறகு தான் அவர்கள் போக்கிலேயே மாற்றம் வந்தது. இரட்டை இலையை முடக்கி ஆர்.கே.நகர் தேர்தலில் இருவரையும் சுயேச்சையாக்கியது.

அட அதுக்கு பிறகாவது உஷாரானார்களா. இரட்டை விளக்கு கம்பத்தை ஓபிஎஸ் அணியினர் சாமர்த்தியமா வாங்கிட்டாங்க. அதிலும் இவர்கள் கோட்டை விட்டாங்க. இப்ப ஏப்.17 ஆம் தேதிக்குள் உன் பலத்தை காட்டுன்னு டெல்லியில் முக்கியமானவங்க சொன்னார்களாம்.

அதுக்கு இப்ப கூட்டத்தை கூட்டி வட்டம் , துணை , ஒன்றியம் , நகரம், பகுதி , மாவட்டம், கழக அணி இன்னும் என்னென்ன நிர்வாகிகள் இருக்காங்களோ அத்தனை பேரிடமும் பிரமாண பத்திரம் வாங்கணுமாம். அதுக்குத்தான் இப்ப பொறுப்பு கொடுத்துருக்காங்க.

இவங்க அதை வாங்கும் நேரம் ஓபிஎஸ் அணியினர் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கி நாங்கத்தான் உண்மையான அதிமுகன்னு மக்கள் கிட்ட சர்டிபிகேட் வாங்கப்போறாங்க மொத்ததில கட்சியும் ஆட்சியும் அங்க போகப்போகுதுன்னு முடிச்சார்.

அப்ப தேர்தல் ஆணையத்திடம் அதிக அளவில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து கட்சி , பொதுச்செயலாளர் , சின்னத்தை காப்பாற்றும் முயற்சிதான் இப்ப முதல் வேலைன்னு இறங்கி இருக்காங்கன்னு சொல்லுங்க என்றோம். 

ஆமா அதில் என்ன சந்தேகம் என்றார் அவர். அது சரி ...அதான் சரி... நடையை கட்டினோம்.