சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கூட்டத் தொடர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் இன்று  சட்டமன்றத்திற்குச் சென்றார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஆர்.கே.நகரை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் டெண்டர் விடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குடிநீர் பிரச்சினையின்போது சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ஆரம்பித்த பிறகுதான் அரசு ஆர்.கே.நகர் தொகுதியை கவனிப்பதாக எங்களது நிர்வாகிகள் சொல்கிறார்கள். ஆளுங்கட்சியை தோற்கடித்து யாரோ ஒருவரை வெற்றிபெற வைத்துவிட்டார்கள் என்பதற்காக ஜெயலலிதாவின் தொகுதியையே புறக்கணிக்கிறார்கள்.  

அமமுகவின் ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த ரத்தினசபாபதி, கலைச்செல்வன் அதிமுகவுக்கு திரும்பி விட்டார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமமுகவை கட்சியாக பதிவு செய்யக் கூட்டம் நடத்தியபோது, இருவரும் வந்திருந்தனர். அப்போது அவர்களிடம், நீங்கள் கட்சியை பதிவு செய்யும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் பதவி போய்விடும் என சொன்னேன்.

மேலும் நீங்க தனித்தே செயல்படுங்க என்று தான் சொன்னேன். ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் ஊடகங்களில் பேசியதை நானும் பார்த்தேன். அவர்கள் எதற்காக பேசுகிறார்கள் என்றும் யார் சொல்லி பேசுகிறார்கள் என எனக்கு தெரியும். கடந்த வாரம் வரை அவர்கள் என்ன பேசினார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும். அவர்கள் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சென்றுள்ளனர். அதில் ஒன்றும் தவறில்லை, போகட்டும் என கூலாக பேசினார்.