தற்போதைய சூழலில் அ.ம.மு.கவில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது தினகரன் மட்டுமே. அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் பழனியப்பன், செந்தில் பாலாஜி போன்றோர் அவர் அவர் மாவட்டத்தில் மட்டுமே பிரபலங்கள். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மதுரையிலும் சரி, திருவாரூர் தொகுதியிலும் சரி அ.ம.மு.க கட்சியில் பிரபலமான மற்றும் வலுவான கட்சிப்பிரமுகர்கள் யாரும் இல்லை.

மேலும் இடைத்தேர்தலிலும் கூட தினகரன் பிரச்சாரத்தை மட்டுமே நம்பி அ.ம.மு.க இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கே இந்த நிலை என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதே நிலை தான். எனவே அ.ம.மு.கவின் பிரச்சார பிரிவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தினகரன் இறங்கியுள்ளார்.

இதற்கு ஜெயலலிதா பாணியில் மார்கெட் போன திரை பிரபலங்களை அ.ம.மு.க நிர்வாகிகள் அணுகி வருகின்றனர். முதற்கட்டமாக மன்மத ராசா பாடலுக்கு இசை அமைத்த தினா தினகரன் வலையில் விழுந்துள்ளார். நேற்று அவர் தினகரனை சந்தித்து அ.ம.மு.கவில் இணைந்துள்ளார். 

ஏற்கனவே தினகரனுடன் இருக்கும் திரைபிரபலங்கள் மனது நிலையாக இல்லை. சில நாட்கள் தினகரனுடன் இருக்கிறார்கள், சில நாட்கள் அ.தி.மு.க பக்கம் சென்றுவிடுகிறார்கள். எனவே பிரச்சாரத்திற்கான சினிமா பிரபலங்களை தன்னுடன் நிலைத்து நிற்க வைக்க நேரடியாக தினகரனே அவர்களுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. 

மேலும் ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.கவில் இருந்த நடிகைகள் விந்தியா, சிம்ரன், நமீதா போன்றோரை தனது அ.ம.மு.க பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அ.தி.மு.கவில் பேச்சாளர்களாக இருந்த போது வழங்கப்பட்ட தொகையை விட கூடுதல் தொகை, பயண பேட்டா என்று திரையுலக பிரபலங்களுக்கு அ.ம.மு.க சார்பில் ஆசை வார்த்தை காட்டப்படுகிறது. இதில் அவர்கள் சிக்குவார்களா? இல்லையா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.