தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுக வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க அதி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன்றனர் சசிகலா தரப்பினர்.

அதற்காக, கட்சியின் கிளை செயலாளர் தொடங்கி, மாநில நிர்வாகிகள் அனைவரிடமும் 20 ரூபாய் வேற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமன்றி, அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும்  இந்தியாவின் மற்ற சில மாநிலங்களிலும் கையெழுத்து வேட்டை நடை பெற்று வருவதாக அதிமுக வினர் கூறுகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  பன்னீர், சசிகலா ஆகிய இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கூறியதால்,  இறுதி முடிவு எடுக்க முடியாமல், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தேர்தலில் கட்சியின் பெயரை இருஅணிகளும் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. 

இடைத்தேர்தலுக்குப் பின்னர், சின்னம் தொடர்பான தனது முடிவை  தேர்தல் ஆணையம்  அறிவிக்க உள்ளது. 

இந்நிலையில், கட்சியின் கிளைச் செயலாளர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரையிலும் அனைவரிடமும் கையெழுத்து வேட்டை தீவிரமாக நடக்கிறது.

கட்சி நிர்வாகிகளிடம் , சசிகலாவை பொதுச்செயலாளராக்க முழுமனதுடன் ஒப்புக் கொள்கிறேன் என எழுதப்பட்ட 20 ரூபாய்  பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்படுகிறது. 

அத்துடன், கிளைச் செயலாளர் மற்றும் ஊராட்சிச் செயலாளரிடம் உள்ள மினிட் புத்தகத்தின் நகல், கட்சியின் உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவையும் பெறப்படுகிறது. 

பன்னீருக்கு ஆதரவான மனநிலையில் உள்ள நிர்வாகிகளுக்கு பலமான  உபசரிப்புக்கள் செய்யப்பட்டு கையெழுத்துப் பெறப்படுகிறது. 


"புரட்சித் தலைவி செல்வி.ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டு வந்த அ.இ.அ.தி.மு.க-வானது, அவரது மறைவுக்குப் பின்னர் கட்சியின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதாவின் நெருங்கிய ஆலோசகராக இருந்த வி.கே.சசிகலாவைத் தேர்வு செய்தோம் என்பதே பத்திரத்தில் உள்ள வாசகமாகும். 


இதற்கு, மாறாக கருத்துக்களைத் தெரிவிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகியோர் ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். 

அதனால், அவர்களுக்கோ அல்லது அவர்களோடு சேர்ந்து இதுபற்றி பேசுபவர்களுக்கோ எந்த தார்மீக உரிமையும் கிடையாது. 

அ.இ.அ.தி.மு.க-வின் அமைப்புகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் பொதுச் செயலாளரான வி.கேசசிகலா, துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு எனது முழுமனதுடன் ஆதரவு அளிக்கிறேன். 

அத்துடன், முதலமைச்சரும் எங்களுடைய கட்சியின் சட்டமன்றத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் உண்மையான தகவல்கள் என உறுதி கூறுகிறேன்’’ என எழுதப்பட்டு கையெழுத்துப் பெறப்படுகிறது. அதற்கு நோட்டரி பப்ளிக் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.