சீமானை பற்றி பேசி அவரி பெரிய ஆளாக்க ரஜினியின் மேடையை பயன்படுத்தியது தவறு என நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ரஜினி ஆதரவாளர் மாயவரத்தான் கிஷோர் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘’நடிகர் ராகவா லாரன்ஸ் நம் அன்புத் தலைவரின் மிகத் தீவிரமான விசுவாசி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தலைவரின் பாதுகாவலராக இருப்பேன் என்று இன்று நேற்றல்ல.. பல காலகட்டங்களில் அவர் வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி விட்டு, சற்று பேரும் புகழும் வந்த பிறகு தலைவரைப் பற்றி வாயே திறக்காமல் இருக்கும் திரைப் பிரபலங்களை ஒப்பிடுகையில் ராகவா லாரன்ஸ் பல மடங்கு உயர்ந்தவர்.

ஆனால் தலைவரின் அரசியல் பிரவேசம் குறித்து ஆரம்பம் முதலே அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ‘அரசியலை ஆதரிக்க மாட்டேன். எங்கம்மா அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறிவிட்டார்’ என்று ஊடகங்களிடம் பல தடவை பேட்டி கொடுத்திருக்கிறார். ‘தலைவரை சினிமாவில் பிடிக்கும். ஆனால் அரசியலில் பிடிக்காது’ என்று கூறும் சில ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதைக் குறை கூற முடியாது. குறை கூறவும் கூடாது. அப்படிப்பட்ட ரசிகர்கள் தலைவரின் அரசியல் குறித்து விமர்சனம் செய்வது கூட தவறல்ல. தாராளமாக செய்யலாம். ஆனால் தலைவரின் ரசிகர் என்ற போர்வையில் செய்யக்கூடாது.

அதே போல ராகவா லாரன்ஸ் கடந்த இரண்டு மேடைகளில் தலைவர் ரசிகர் என்ற பெயரில் அரசியல் பேசியிருப்பது சரியில்லை. அதுவும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமாரை எச்சரிக்கும் விதமாக தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பேசியதும் சரி.. அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று நேற்றையை மக்கள் மன்ற நிகழ்ச்சி மேடையில் பேசியதும் தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து.

திரைப்பட மேடையில் நம் தலைவர் அரசியல் பேசுவதே இல்லை. ஆனாலும் ஏனைய நடிகர்கள் யாராவது அவர்கள் திரைப்பட மேடையில் அரசியல் பேசினால் இந்த கேடு கெட்ட ஊடகங்கள் அதற்கு முன்னுதாரணம் நம் தலைவர்தான் என்பது போல திரித்து எழுதுவது தொடர்கதையாக இருக்கிறது.

ராகவா லாரன்ஸூக்கு சீமார் மீது எழுந்துள்ள கோபமும், ஆதங்கமும் அனைத்து தலைவர் காவலர்களுக்கும் உள்ளதுதான். ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டியது மேடையில் அல்ல. அதுவும் தலைவரின் எதிராகவே பேசியது முதல் தவறு. அதன் பிறகு ‘அன்பைப் பகிருங்கள்’ என்று தலைவர் பேசிய பிறகும் மீண்டும் அடுத்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே சீமார் பெயரைக் குறிப்பிட்டே பேசுவது மிகப் பெரும் தவறு. கூடவே ‘தனி மனிதத் தாக்குதல் நடத்த வேண்டாம்’ என்றும் பேசியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் அவர்கள் சீமாரின் இந்த நடவடிக்கைக் குறித்து தன் சமூக வலைதளப் பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். அல்லது வேறு எதாவது ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு அரசியல் கலக்காத திரைப்பட மேடையையும், பிறந்த நாள் கொண்டாட்ட மக்கள் மன்ற மேடையையும் பயன்படுத்தியிருப்பது தவறு.

‘ஆளுமை மிக்கத் தலைமை இல்லை’ என்று தமிழக அரசியல் குறித்து நம் தலைவர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். அப்படி இருக்கையில், “ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும். எடப்பாடி தொடர வேண்டும்” என்று தலைவரின் ரசிகர்கள் பொதுவாகவே விரும்புகிறார்கள் என்றெல்லாம் பேசியது சரியா? அரசியல் தெரியாது என்றால் ஏன் அரசியல் குறித்து வாய் திறக்க வேண்டும்?

நேற்றைய மேடையில் விகடன் மூலமாக ஒரு கோடி ரூபாய் வழங்கிய விஷயத்தையும் பேசியிருந்தார் ராகவா லாரன்ஸ். அந்த விஷயத்தில் ஒரு ‘க்’ இருக்கிறது. நூறு பேர் மூலமாக தலா ஒரு லட்ச ரூபாய் உதவி வழங்கப்படும் என்று பிரமாண்ட விளம்பரங்களை விகடன் வெளியிட்டது. நூறு பேரை வாரம் ஒருவராக அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த நூறு பேரும் பரிந்துரை செய்த நல்ல காரியங்கள் செயல்படுத்தப்பட்டதா? அப்படி செயல்பட்டப்பட்டால் அடுத்த நூறு வாரங்களுக்கு அதைப் பற்றி பக்கம் பக்கமாக வரிந்து கட்டி எழுதியிருக்க மாட்டார்களா என்ன? அப்படி இல்லாமல்.. ஒரு சிலரின் பரிந்துரைகளை செயல்படுத்தத் தொடங்கிய போதே அது நிறுத்தப்பட்டது. 

அப்படி நிறுத்தப்பட்டது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கே முறைப்படி தெரியப்படுத்தவில்லை என்றொரு குற்றச்சாட்டு உள்ளது. என்ன காரணம் என்று தொடர்ந்து கேட்ட பிறகு விகடன் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் தனிப்பட்ட முறையில், “அந்தத் தொகை சென்னை பெருவெள்ள நிவாரணத் தொகைகளுக்காகப் பயன்படுத்தப் பட்டது” என்று கூறினார்கள். அப்படி பயன்படுத்தியிருந்தால் அது நல்ல விஷயமே. ஆனால் அதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமல்லவா? விகடன் நிறுவனத்திடம் கூறி அதை ராகவா லாரன்ஸ் அவர்கள் செய்து விடுவது நல்லது. அப்படி இல்லாமல் நூறு பேர் வழியே அவற்றைச் செயல்படுத்தியிருந்தால் அவை அனைத்தையும் பட்டியலிட்டு விட்டால் அவர்கள் செய்யவில்லை என்று இணையத்தில் பல நாட்களாக கூறிக் கொண்டிருப்பவர்களின் வாயை அடைத்தது போல இருக்கும்.

ராகவா லாரன்ஸ் நம் அன்புத் தலைவரின் வழியில் வெளியில் தெரியாமலேயே பல நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார். விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அவர் தொடர்ந்து தலைவரின் உண்மைக் காவலராக, அவர் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் கூட.

ஆனால் தலைவரே ‘நெகட்டிவிட்டி வேண்டாம். அன்பைப் பகிருங்கள்’என்று கூறிய பிறகும் அடுத்த மேடையிலேயே மீண்டும் தனித்தாக்குதல் நடத்தியது சரியல்ல. நாமே சீமாரை பெரியாளாக்க வேண்டுமா? வருத்தமாக இருக்கிறது ராகவா லாரன்ஸ் அவர்களே’’என தெரிவித்துள்ளார்.