ஏதோ ஒன்றை பிடிக்கப்போக அது என்னவோ ஒன்றாக மாறி பிறாண்டி எடுத்த கதையாகிவிட்டது ஸ்டாலினின் நிலை. திருமாவளவனின் பேச்சுக்கு பதில் தருகிறேன் பேர்வழியென்று கேமெரா முன்னால் உட்கார்ந்த துரைமுருகன், ரொம்பவே துடுக்காக பேசிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. குறிப்பாக துரை மீது தணியாத ஆத்திரத்தை கொண்டிருக்கிறது காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக். காரணம் அவர் உதிர்த்த அந்த ஒற்றை வார்த்தை.

 
 
அது என்ன?... பேட்டியின் போது துரைமுருகன், “நாங்கள் இன்னும் முழுமையான கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் எங்களிடம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளனர். அவர்கள் ‘பழைய கஸ்டமர்கள்’ என்றார். இந்த வார்த்தைதான் காங்கிரஸை கண் சிவக்க வைத்திருக்கிறது. முஸ்லீம் லீக்கையும் முகம் கோண வைத்துள்ளது. 

துரையின் பேட்டி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பின், ஸ்டாலினின் கவனத்துக்கு சில தகவல்களை கொண்டு சென்றது காங்கிரஸின் தமிழக தலைமை. அதில் “தலைவர் கருணாநிதி, பிறகு நீங்கள் இருவருக்கும் மரியாதை தந்துதான் பல காலமாக இங்கே உங்கள் தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் இப்படி எங்களை கேவலமாக பேசுவதை எப்படி பொறுக்க முடியும்? ’கஸ்டமர்கள்’ அதுவும், ‘பழைய கஸ்டமர்கள்’ என்று அடையாளப்படுத்துவது கேவலத்தை தருகிறது.

 

கஸ்டமர்! எனும் வார்த்தைக்கு மோசமான விளக்கங்களும் இருக்கிறது. உலகம் அந்த கோணத்தில்தான் எங்களைப் பார்க்கும். இந்த வார்த்தை உங்களுடையை கட்சியையும் சேர்த்தே அசிங்கப்படுத்தி இருக்கிறது. எனவே துரைமுருகனை கண்டியுங்கள், அவரை பணிவாய், பதமாய் பேசச்சொல்லுங்கள். இது மாதிரியான இழுக்கு இன்னமும் தொடர்ந்தால் நாங்களும் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்.” எனும் ரீதியில் இருந்ததாம் அந்த தகவல்.

முஸ்லிம் லீக்கின் மூத்த நிர்வாகிகளும், தி.மு.க. வின் முக்கியஸ்தர்கள் சிலர் வழியாக ‘துரைமுருகனின் வார்த்தை பிரயோகம் சரியில்லை’ என்று தங்களின் வருத்தத்தை சொல்லி அனுப்பியுள்ளனர். யோசிக்கிறார் ஸ்டாலின்!