தனது தந்தையை போலவே இளைய தலைமுறையினரை அவர் ஈர்ப்பார். ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி அவர் மிகுந்த ஆற்றல் மிக்கவர் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றிய திமுக மு.பெ.சாமிநாதனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் மற்றும் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கொண்டாடிவருகின்றனர்.

உதயநிதி இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்றத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன்; உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இளைஞரணிச் பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல, கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி. உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும் என்றார்.

மேலும், தனது தந்தையை போலவே இளைய தலைமுறையினரை அவர் ஈர்ப்பார். ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி அவர் மிகுந்த ஆற்றல் மிக்கவர். உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நான் வியந்து போனேன். சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும்படி பேசுவார் உதயநிதி என புகழ்ந்துள்ளார்.