dhivakaran controlled dinakran and planning to recover two leaves

சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், அதிமுகவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தினகரன், ஒட்டுமொத்த மன்னார்குடி உறவுகளையும் புறக்கணித்தார்.

எனினும், தினகரனின் செயல்பாடுகளை ரசிக்காத டெல்லி, எடப்பாடி மற்றும் திவாகரன் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுத்து பார்த்தது. ஆனாலும், அது பலனளிக்கவில்லை. அதனால் திகார் சிறைக்கு செல்ல நேர்ந்தது.

தினகரன் திகார் சிறைக்கு சென்றதும், நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. எடப்பாடி மற்றும் திவாகரனின் கை ஒங்க ஆரம்பித்து விட்டது.

இதை விரும்பாத தினகரன், ஜாமினில் வெளி வந்ததும், சில எம்.எல்.ஏ க்களின் ஆதரவுடன், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். அதனால், அவரை அடக்கி வைக்க நினைத்த திவாகரன், அனைத்தையும், சசிகலாவிடம் போட்டு கொடுத்தார்.

இந்நிலையில், சசிகலாவை அண்மையில் சந்தித்த தினகரனிடம், குடும்ப உறவுகளாகிய நீங்கள், உங்களுக்குள் மோதிக்கொண்டால், அது எடப்பாடிக்கும், பாஜக விற்கும்தான் லாபம். ஒற்றுமையுடன் இருந்தால்தான், கட்சியையும், ஆட்சியையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று கூறி உள்ளார்.

மேலும், இனி திவாகரன் சொல்வதை கேட்டு நடந்துகொள் என்றும், தினகரனுக்கு உத்தரவு போட்டுள்ளார் சசிகலா. இதையடுத்தே, உறவுகளுக்குள் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. தினகரனும் திவாகரனை சந்தித்து பேசியுள்ளார்.

அதையடுத்து, கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் சேதாரம் இல்லாமல் பெறவேண்டும் என்றால், பன்னீர் அணி இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் திவாகரன். அத்துடன் டெல்லியுடனும் அவர் தொடர்பில் இருக்கிறார்.

அதனால், தற்போது தினகரனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள திவாகரன், பன்னீர் அணியை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே, பன்னீர் அணியுடன் தொடர்பில் இருந்து வரும் திவாகரன், அணிகள் இணைப்பை வெற்றிகரமாக முடித்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டு விடுவார் என்று உறுதியாக கூறுகின்றனர் அதிமுகவினர்.

தினகரன் அதிமுகவின் துணை பொது செயலாளராக இருந்தாலும், இனி அவர், திவாகரன் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும் என்பதே சசிகலாவின் உத்தரவு.

ஆனால், கட்சியில் தமக்குள்ள பிடி தளர்ந்துவிட கூடாது என்பதற்காகவே, இன்னும் எம்.எல்.ஏ க்களை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார். எனினும், அதை திவாகரன் பார்த்து கொள்வார் என்பது உறுதியாகி விட்டது.

மேலும், நீங்கள் உங்கள் ஆட்சியை திறம்பட நடத்துங்கள், நாங்கள் யாரும் குறுக்கிடமாட்டோம் என்று எடப்பாடியிடம் உறுதி அளித்துள்ள திவாகரன், எப்பாடு பட்டாவது, பன்னீர் அணியை இணைத்து சின்னத்தை மீட்க பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆகவே, குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன்பாகவே, அணிகள் இணைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் அதிமுகவினர்.