தினகரனின் அ.ம.மு.க கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 3 பேரின் பதவியை பறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.கவில் இருந்து ஓரங்கப்பட்ட தினகரனுடன் 20 எம்.எல்.ஏக்கள் சென்றனர். இவர்களில் 18 பேர் எடப்பாடி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். எனவே அந்த 18 பேரின் எம்.எல்.ஏக்கள் பதவியை எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தனபால் பறித்தார். எஞ்சிய 2 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக கடிதம் கொடுக்காத காரணத்தினால் அவர்கள் பதவி தப்பியது.

எடப்பாடிக்கு எதிராக கடிதம் கொடுக்கவில்லை என்றாலும் எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்களாகவே தொடர்ந்து வருகின்றனர். சட்டப்பேரவையில் மட்டும் இன்றி பொது நிகழ்ச்சிகளிலும் தினகரன் ஆதரவாளர்களாகவே இருவரும் வலம் வருகின்றனர். மேலும் சில மாதங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் தினகரன் அணியில் இணைந்தார். இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களாக சட்டப்பேரவையில் கணக்கில் கொள்ளப்படுகின்றனர். ஆனால் மூன்று பேருமே டி.டி.வியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 

மூன்று பேரும் தினகரன் கட்சியில் உறுப்பினராக சேராத காரணத்தினால் அவர்கள் மீது அ.தி.மு.க நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களை தினகரன் அறிவித்தார். அ.ம.மு.கவின் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களாக உள்ள மூன்று பேரையும் தினகரன் தனது கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. 

ஏனென்றால் ஒரு கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் மற்றொரு கட்சியில் பொறுப்பில் சேர்ந்தால் அவர்கள் கட்சித் தாவியவர்களாக கருதப்பட்டு எம்.எல்.ஏ பதவியை பறிக்க முடியும். அந்த வகையில் அ.ம.மு.கவில் கட்சிப் பொறுப்பில் இருக்கும் மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீதும் சபாநாயகரிடம் புகார் அளிக்க அ.தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உறுதிப்படுத்தியுள்ளார்.