அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் உடலுறுப்புகளை சீராக இயங்க வைப்பது சவாலாக இருப்பதாகவும் நேற்று மாலை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை தெரிவித்ததால், தொண்டர்கள் பதற்றமடைந்தனர். 

இன்று காலை முதலே திமுக மூத்த நிர்வாகிகள் காவேரி மருத்துவமனையில் முகாமிட்டனர். தலைமை கழக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் சற்றுமுன் சந்தித்து பேசினார். 

ஏற்கனவே காவேரி மருத்துவமனையில் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 1200 காவலர்கள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவரும் நிலையில், ராஜரத்தினம் மைதானத்திலிருந்து காவலர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கோபாலபுரம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இந்நிலையில், அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஃபேக்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள காவலர்கள் உட்பட அனைவரும் காவலர் சீருடையில் தயாராகும்படி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரும் சென்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வருடன் அவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.