மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்த டிஜிபி அசுதோஷ் சுக்லாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மண்டபம் முகாமுக்கு தூக்கியடித்துள்ளார். இவரது பணியிட மாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றதால் சிறைத்துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா தேர்தல் பாதுகாப்பு பிரிவு டிஜிபியாகப் பதவியேற்றதும் 4 முக்கிய அதிகாரிகளை மாற்ற செய்ய தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்தார். அதில் முதல்வர் எடப்பாடிக்கு மிக நெருக்கமாக இருந்த உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி அதிரடியாக மாற்றப்பட்டார். இவர் தேர்தல் நேரத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளில் முக்கிய கவனம் செலுத்தி வந்தார். மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட மேலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றவும் சுக்லா பரிந்துரைத்திருக்கிறார். இதனால் முதல்வர் எடப்பாடி மிகவும் கோபத்தில் இருந்து வந்தார்

இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. அதிமுக தேனியில் மட்டுமே வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. மேலும் டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக 2 நாட்களாக டெல்லியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை திரும்பினார். தேர்தல் தோல்வியால் டெல்லியில் அவருக்கு உரிய  மறியாதை கிடைக்கவில்லை என்றும், மற்ற கூட்டணிக் கட்சிகளை விட, அதிமுகவினர் வேண்டா வெறுப்பாகவே பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நேரத்தில் அசுதோஷ் சுக்லா அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.

 

இந்நிலையில் தேர்தல் முடிந்து தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் அசுதோஷ் சுக்லா உள்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக சிறைத்துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா மீண்டும் சிறைத்துறை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இது அவர் மீதான பழி வாங்கும் நடவடிக்கையா எனச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.