கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக நடத்திய சாலை மறியல் போராட்டம், அனைத்து தரப்பு மக்களையும் அலைக்கழித்ததால் மக்களின் கடும் கோபத்துக்குள்ளானது. 30 ஆண்டுகளாக மறந்து போன கோரிக்கையை 2021 தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு பாமக திடீரென்று பரண் மேல் இருந்து தூசுதட்டி எடுத்தது அரசியல் வலிமையைக் கூட்டுவதற்காகத்தான் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பாமக சாதிக்கட்சி அல்ல என்றும், அது வன்னியர்களுக்கான கட்சி என்று பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது என்று 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மீண்டும் வன்னியர் பிரச்சினையைக் கையில் எடுத்து திமுகவை மட்டுமின்றி, கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் கடுமையாக சாடி வருகிறார். கடந்த தேர்தலில் தனது மகன் அன்புமணியை முன்னிறுத்தி அனைவருக்குமான முதல்வர் வேட்பாளர் என்றும், தமிழகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவார் என்று ஹை-டெக் பிரச்சாரத்தை ராமதாஸ் மேற்கொண்டார். ஆனால், பாமகவை அனைத்து தரப்பினருக்கான கட்சியாக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளாததால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக தோற்றது.

ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை. இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எண்ணற்ற தியாகங்களைச் செய்து இருக்கிறோம். 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை”என்று கூட்டணிக் கட்சியான அதிமுகவையும் எதிர்க்கட்சியான திமுகவையும் சாடியுள்ளார். பாமகவை பொதுமக்கள் யாரும் நம்பாமல், வேறு சமூகத்தைத் சேர்ந்தவர்கள் யாரும் அந்தக் கட்சியை ஆதரிக்காமலும் புறக்கணித்தது சரிதான் என்பதை ராமதாஸின் இன்றைய போராட்டம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

1991 சட்டமன்றத் தேர்தலிலும் 1996 தேர்தலிலும் வன்னியர் கட்சி என்பதை முன்வைத்தே பாமக தேர்தலை சந்தித்தது. 1991-ல் ஒரு இடத்திலும், 1996-ல் நான்கு இடங்களில் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது. பாமக 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதுதான், கட்சிக்கு அங்கிகாரமும், மத்திய ஆட்சியில் பதவியும் கிடைத்தது. மீண்டும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனும், 2006 தேர்தலில் திமுகவுடனும் அணி சேர்ந்து சட்டமன்றத்தில் இரட்டை இலக்க இடங்களைப் பெற்றது பாமக. ஆனால், மீண்டும் மீண்டும் அணி மாறி எந்த வித கொள்கை நிபந்தனைகளையும், முன்வைக்காமல் சீட் பேரத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்ததால் வன்னியர்களே அந்தக் கட்சியைக் கைவிடத் தொடங்கினர்.

பாமக 1998 முதல் 2014 வரை பலமுறை மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துள்ளது. ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய கேபினட்டில் இடம்பெற்றார். அப்போதெல்லாம் வன்னியர் இட ஒதுக்கீடுப் பிரச்சினையை அவர் பேசியதில்லை. பல தேர்தல்களில் பல கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைத்தபோதும், வன்னியர் இட ஒதுக்கீட்டை ஒரு நிபந்தனையாக பாமக வைத்ததில்லை. எந்தக்கட்சி அதிக இடங்கள் தருகிறதோ எந்தக் கட்சியுடன் சேர்ந்தால் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ, மத்திய அமைச்சர் பதவியோ கிடைக்குமோ அந்தக் கட்சியுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மீண்டும் வன்னியர்களை தனது கட்சிக்கு ஆதரவாகத் திருப்புவதற்காகவும் சாதிபலம் இருக்கிறது என்று நிரூபித்து கூட்டணி அமைக்கும் கட்சியுடன் கடுமையான பேரத்தை நடத்தி அதிக தொகுதிகளை பெறுவதற்காகத்தான் என்று கருதப்படுகிறது. மேலும், ஆட்சியில் பங்கு என்னும் கோரிக்கையையும் அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி பெறவுமே மீண்டும் இட ஒதுக்கீடு கோரிக்கை ராமதாஸுக்கு நினைவு வந்திருக்கிறது என்று இதுவரை பாமகவால் எந்தவிதமாக பலனையும் பெறாத வன்னியர்களே கருதுகின்றனர்.