ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு பட்டியலில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவருக்கான ஒய் பிரிவு பாதுகாப்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சி.ஆர்.பி.எப் இது தொடர்பாக தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’நாளை முதல் அவருக்கான பாதுகாப்பு விலக்கப்படுகிறது. 

பிற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும்’அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் முடிவுகளின்படி, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கான பாதுகாப்பு படிநிலைகளை குறைப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படிநிலைகள், குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது. தற்போது, ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவருக்கான ஒய் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரிவின் கீழ் 8 துணை ராணுவ படையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.