டெல்டா மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த எஸ்.கே. வேதரத்தினம் இப்பகுதி திமுகவில் முக்கிய ஆளுமையாக இருந்தார். 12 வருடங்கள் ஒன்றிய செயலாளராகவும் திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 4வது முறையும் 2011 சட்டமன்றத் தேர்தலில் நிற்க வேண்டும் என்று தொகுதி மக்களும் திமுக நிர்வாகிகளில் பலரும் விரும்பினர். 

ஆனால், அப்போது கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சீட்  கொடுக்காத விரக்தியில் இருந்த அவர்  சுயேச்சையாக போட்டியிட்டார். பாமக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வேதரத்தினம் 2வது இடம் பிடித்தார். கட்சியின் தலைமையை மீறி சுயேச்சையாக போட்டியிட்டதால் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர், மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டார். ஆனால், கட்சியில் முன்பு போல முக்கியத்துவம் இல்லாத நிலையில் பாஜகவில் இணைந்தார். 

இவரை பாஜகவுக்கு அழைத்து வந்தவர் அப்போதைய பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். பொன்னாரின் ஆதரவாளராகவே இருந்த வேதரத்தினருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது.  இந்நிலையில், அண்மையில் பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் ஜூலை 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் டெல்டாவின் முக்கிய ஆளுமையான வேதரத்தினத்துக்கு மாநில பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாநில நிர்வாகத்தில் இருந்தே ஓரங்கட்டப்பட்ட வேதரத்தினம் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். இதனால் வேதரத்தினத்தின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.