இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் 3 நாள் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று டி.டி.வி தினகரன் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர், விசாரணையில், சுகேஷிடம் பேசியதை டிடிவி ஒப்புக்கொண்டார்.

பின்னர், டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் தினகரனும் அவரது நண்பர்  மல்லிகார்ஜுனாவும் ஆஜர் படுத்தபட்டனர்.

இதையடுத்து போலீசார் தரப்பில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் டெல்லி போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

விசாரணைக்காக சென்னை, கொச்சி, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர் டெல்லி போலீசார்.

அதன்படி தினகரன் சென்னை அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தினர். 3 நாள் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று டி.டி.வி தினகரன் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் டெல்லி அழைத்து செல்லபடுகிறார்.