எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர். பல சோதனைகளை தாண்டி இயக்கத்தை நடத்தி வந்தேன். தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றவே அதிமுகவுடன் இணைகிறோம். 

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அரசியல் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. உடல்நிலை காரணமாக அரசியலை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதிமுகவுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்.

போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும். அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை. போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது’’ என அவர் கூறினார்.