deepa started campaign in rk nagar

ஆர்கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அனைத்து கட்சியினரும் இறங்கிவிட்டனர். இதையொட்டி திமுக, அதிமுகவின் 2 அணிகள், தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். இதுவரை கட்சி நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வந்த அவர், இதுவரை பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். இதனால், தொண்டர்கள் விரக்தியில் இருந்தனர்.

இந்நிலையில், ஆர்கே நகர் பிரச்சாரத்தில் தீபா களம் இறங்கியுள்ளார். இன்று காலை தொகுதிக்கு சென்ற அவர், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரச்சாரத்தின்போது, “அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி 2 அணிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால், அதிமுகவின் உண்மையான வாரிசு நான்தான்.

ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக கூறி வாக்கு கேட்கிறார்கள். இருவருக்கும் மோதல் வந்த பிறகே, இதுபற்றி பேசுகிறார்கள். இல்லாவிட்டால், அதை மூடி மறைத்து இருப்பார்கள். ஆனால், நான் ஆரம்பம் முதலே இதுபற்றி மக்களிடம் கூறி வருகிறேன்.

ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை நான் தொடருகிறேன். உங்களுக்காக நான் உழைக்க காத்திருக்கிறேன். ஜெயலலிதாவின் சாவில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, பொதுமக்களுக்கு உண்மையை தெரியபடுத்த வேண்டும்.

எனவே, படகு சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்” என கூறி அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.