deepa madhavan ready for the divorce
அதிர்ஷ்ட லட்சுமி, தாமாக வீட்டு வாசலை தட்டும் வாய்ப்பு தமிழக அரசியலில் இதுவரை யாருக்குமே கிடைத்ததில்லை.
அப்படி கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பை தவறவிட்டு விட்டார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
ஜெயலலிதா மறைவை அடுத்து, சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத 90 சதவிகித அதிமுக தொண்டர்கள், தினந்தோறும் தீபா வீட்டிற்கு படையெடுத்து அவரை அரசியலுக்கு அழைத்தனர்.

அவரும், அளவுக்கு அதிகமாக தொண்டர்களின் பொறுமையை சோதித்த பின்னர், வெளியில் வந்து பேரவையை தொடங்கினார். ஆனால், அதன் பொறுப்பாளர் நியமனத்தில்தான், குளறுபடி ஆரம்பித்தது.
தன்னுடைய டிரைவரையும், அவரது மனைவியையும் பேரவைக்கு பொறுப்பாளராக நியமித்தார். இது, நாள் கணக்கில், தீபா வீட்டு வாசலில் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை மிகவும் கொதிப்படைய வைத்து விட்டது.

மறுபக்கம், நிர்வாகிகள் நியமனத்தில் தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் ஏற்பட்ட விரிசல், அவர்களது குடும்ப வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது.
அதே சமயத்தில், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வத்தின் கை ஒங்க ஆரம்பித்தது. ஏற்கனவே, தீபாவின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையால், மனம் வெறுத்து போன அவரது ஆதரவாளர்கள் பலரும் பன்னீர் அணிக்கு தாவி விட்டனர்.
இது ஒரு புறம் இருக்க, தீபாவுக்கும் - மாதவனுக்கும் ஏற்பட்ட மோதல், குடும்பத்தையும் தாண்டி, பேரவையில் சிக்கலை உருவாக்கி விட்டது.
ஒரு கட்டத்தில், ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு, தாமும் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார் மாதவன்.
இப்படி, குடும்ப குழப்பம் அரசியல் குழப்பமாக மாறியதால், தீபாவுக்கு தாமாக குவிந்த செல்வாக்குகள், தாமாகவே விலக ஆரம்பித்தன.
அவரும் ஆர்.கே நகரில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தில் இறங்கினார். அவரது ஆதரவாளர்களும், அவருக்கு பிரச்சாரத்தில் உறுதுணையாக களமிறங்கினர்.
அந்த நேரம் பார்த்து, கணவர் மாதவனும், தமது மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதிக்க போவதாக அறிவித்தார். ஏற்கனவே, வேட்பு மனுவில், கணவர் மாதவன் பெயரை தவிர்த்த தீபா, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆர்.கே.நகரில் தீபா ஜெயித்தால், இருவரும் சேர்ந்து வாழ்வது என்றும், தோற்றால் சொத்துக்களை பங்கு பிரித்துக்கொண்டு பிரிந்து விடுவது என்றும் இருவரும் முடிவெடுத்ததாக கூறப்பட்டது.
தற்போது, ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விவாகரத்து கோரி, மாதவன், நீதி மன்றத்திற்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல, சும்மா இருந்த தீபா-மாதவன் குடும்பத்தை அரசியல் கெடுத்துவிட்டது.
