அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு இன்று கூடியது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொது செயலாளராக நியமனம் செய்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் அமரக்கூடாது என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அதிமுகவை வழி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீபா படத்தை வைத்து பிளக்ஸ் பேனர், கட்அவுட், போஸ்டர், பேனர்கள் என அனைத்து பகுதியிலும் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அதில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகலா அதிமுக பொது செயலாளராக பதவியேற்பதை எங்களால் ஏற்று கொள்ள முடியது என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சு வார்த்தை இதுவரை நடந்து வருகிறது.
அதேபோல், சசிகலா அதிமுக பொது செயலாளர் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், தீபாவை ஆதரித்தும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேனர் வைத்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், உண்மையான அதிமுக தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என தீபா அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்கால நலன் கருதி சரியான நேரத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பேன். என் மீது அன்பு காட்டி பேனர்கள், கடட் அவுட் வைப்பதும், தனது படத்துடன் போஸ்ட்ர் ஒட்டுவது போன்ற செயல்களில் அதிமுக தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம்.
மறைந்த எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அமைதியுடன் பொறுமை காக்க வேண்டிய தருணம் இது. இப்போதைய சூழலில் தேவையில்லாத சர்ச்சைக்கு அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் இடம் கொடுத்து விட கூடாது.
நல்லது நிச்சயம் நடக்கும், அதற்காக ஒவ்வொருவரும் பொறுமை காக்க வேண்டும் என்பதே இந்த தருணத்தில் எனது தாழ்மையான வேண்டுகோள். எதிர்கால நலன் கருதி சரியான நேரத்தில் நிச்சயம் நான், முடிவை அறிவிப்பேன். எனது வழி, சரியான வழியில் எதிர்காலத்தை நோக்கி நிச்சயம் இருக்கும்.
தேசத்தின் வளர்ச்சியும், அதிமுகவின் வளர்ச்சியையும் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த தருணத்தில் செயல்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
