ஆர்கே நகர் சட்டமன்ற இடை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக 3 அணிகள், பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், அதிமுகவின் 3வது அணியான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோயில் தெருவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், தீபா பேசியதாவது:- 

இந்த தொகுதியில் ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மக்களுக்கு செய்த தொண்டுகள், பாதியிலேயே நிற்கிறது. அதனை நிறைவேற்றவே, நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதை நான் வெளியே கொண்டு வர போராடி கொண்டு இருக்கிறேன். இதனால், எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தது. நான் அதற்கு அஞ்சவில்லை.

எனக்கு மிரட்டல் விடுப்பவர்கள் யார் என்று நான் சொல்ல வேண்டியதே இல்லை. அது உங்களுக்கே தெரியும். நான் தனி கட்சி ஆரம்பிக்க போகிறேன் என கூறியதும், எனக்கு எவ்வளவு தடங்கல் செய்ய வேண்டுமோ அதை செய்தார்கள்.

நான் பல மாவட்டங்களுக்கு சென்று, நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டேன். அதுமுடியவில்லை. காரணம், எனக்கு போலீசார் அனுமதி தரவில்லை. அதற்கு காரணம் யார் என்று உங்களுக்கே தெரியும்.

ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளேன். படகு சின்னத்தில் என்னை வெற்றிபெற செய்யுங்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

நான் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போது, துரோகிகளின் முகத்திரையை கிழித்து ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தருவேன். இவ்வாறு அவர் பேசினார்