அரசியல் ஆதாயத்துக்காக வீண்பழி சுமத்தினால் திமுக எம்.பி.தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன் என்று மீன்வனத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். இல்லை என்றால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திமுக எம்.பி. தயாநிதிமாறன் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டை வியாபம் ஊழல் என்று பேசுகிறார். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி மூலம் வெளிப்படையான விசாரணை நடத்தி அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நடந்த தவறை வைத்து ஒட்டுமொத்தமாக டி.என்.பி.எஸ்.சி.யை நாம் சந்தேகப்படக் கூடாது. ஏன் என்றால், அதன் அமைப்பு சரியாக இருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு தொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கை விரைவில் அவர் சந்திப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.