முதல்வர் உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 10 பேர் கொண்ட சைபர் குழு உங்களை கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தவறான வதந்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பீதி கிளப்ப படுகிறது.
இது குறித்து அதிமுக ஊடக பிரிவு நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் உடல் நிலை குறித்து வதந்தியை பரப்பியவர்களின் சமூக வலைதள கணக்குகளை மூடக்கவும் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைதளத்தின் தலைமையிடத்திற்கு சென்னை மாநகர காவல் துறை பரிந்துரை கடிதத்தை இமெயில் மூலமாக அனுப்பியுள்ளது.
தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருபவர்கள் யார்- யார் என்பது தொடர்பான பட்டியலை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
சேகரித்து அந்தந்த சமூகவலைதள தலைமையிடத்திற்கு அனுப்பி அவர்களின் விவரங்களை தரும்படி கேட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்புபவர்கள் யார்- யார் என்பதனை கண்காணிக்க 10 பேர் கொண்ட தனியார் தொழில்நுட்ப வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் உடல் நிலை குறித்து யார் மூலமாக வதந்தி பரப்பப்படுகிறது என்பதனையும் கண்டறிந்து வருவதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. வதந்தியை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
