அதிமுகவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு தினகரனுடன் முதலில் இணைந்த இரண்டு எம்எல்ஏக்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில் கடைசியாக தினரகனிடம் சென்ற கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு தான் தற்போது வரை வழி பிறக்காமல் உள்ளது.

ஓராண்டுக்கு முன்னர் திடீரென செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி பிரபு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியில் எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை என்று புலம்பினார். மறுநாளே தினகரனை சந்தித்து அவரது ஆதரவாளவர் ஆனார். பிறகு தினகரனுடன் சட்டப்பேரவையில் இணைந்து செயல்பட்டு வந்தார். தினகரன் வெளிநடப்பு செய்யும் போதெல்லாம் அவரும் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தார்.

 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன என்றால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான ரத்தினசபாபாதி, கலைச் செல்வன் ஆகியோர் தினகரனை கட்சியில் ஓரங்கட்டுவதற்கு முன்பிருந்தே அவரது ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தான் ஓரம்கட்டப்பட்ட பிறகு தினகரனுடன் சென்ற முதல் எம்எல்ஏ மற்றும் ஒரே எம்எல்ஏ. இதனால் கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு தினகரன் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

 

இதற்கிடையே கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முடிவெடுத்த நிலையில் உடனடியாக தினரகனிடம் இருந்து ஒதுங்கினார் பிரபு. மேலும் அதிமுக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் எதிர்த்து வாக்களிப்பேன் என்று கூறி எடப்பாடியிடம் விசுவாசத்தை காட்டினார். ஆனால் அதை எல்லாம் எடப்பாடி தரப்பு கண்டுகொள்ளவில்லை. 

அதே சமயம் தினகரன் அணியில் இருந்து ரத்தினசபாபாதி மற்றும் கலைச்செல்வன் அடுத்தடுத்த நாட்களில் முதலமைச்சரை சந்தித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகினர். பிரபுவும் முதலமைச்சரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அது நடைபெறவில்லை. இதற்கு காரணம் அமைச்சர் சிவி சண்முகம் தான் என்கிறார்கள். 

பிரபு எம்எல்ஏ ஆனது முதலே அவருடன் சிவி சண்முகம் இணக்கமாக இல்லை. பிரபுவும் அமைச்சர் என்பதால் சிவி சண்முகத்திடம் பணிந்து செல்வது இல்லை. தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தார். இதன் உச்சகட்டமாகவே சிவி சண்முகம் மீது புகார் கூறிவிட்டு தினகரனுடன் சென்றார். தற்போது மீண்டும் அதிமுகவிற்கு வர பிரபு முயற்சிக்கும் நிலையில் முதலில் சிவி சண்முகத்தை சென்று பார்க்குமாறு அதிமுக தலைமை அவரிடம் கூறியுள்ளது. 

ஆனால் சிவி சண்முகம் தரப்பு பிரபுவை சந்திக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் சமாதானம் அடைந்தால் மட்டுமே அதிமுகவில் மீண்டும் இடம் கிடைக்கும் என்கிற நிலையில் அப்படியே கிடைத்தாலும் சண்முகத்தை மீறி அரசியல் செய்ய முடியுமா என்று திரிசங்கு நிலையில் பிரபு சிக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.