அஜீத்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்..? என  அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளள அமைச்சர் சி.வி.சண்முகம், வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நடிகர் கமல் தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து பேசி வருகிறார். இதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியலை பற்றி அவருக்கு என்ன தெரியும்.

கடந்த திமுக ஆட்சியில் நடிகர் சங்கம் ஒரு நிகழ்ச்சி நடத்தியது. அதில், அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் அஜீத், “நடிகர் சங்கத்தின் பெயரை வைத்து மிரட்டுகிறார்கள்” என பகிரங்கமாக மேடையில் கூறினார்.

அப்போது, இந்த கமல் எங்கே சென்றார். அஜீத்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்..? இப்போது வந்த அஜீத் பேசும்போது, கமல் ஏன் பேசவில்லை.

கமலுக்கு தைரியம் இருந்தால், அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும். அவர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை கூறினால், அதற்கு நாங்கள் முறையாக பதில் அளிப்போம்.

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம். அதை யாருக்காகவும் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். நாங்கள் அனைத்து ஆவணங்களையும், பிரமாண பத்திரமாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துவிட்டோம். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த அனைத்து பத்திரங்களும் போலியானவை.

இவ்வாறு அவர் கூறினார்.