முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கமலை மட்டுமல்ல தவக்களையை கூட ஆதரிப்பார் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி குறித்தும் கமலஹாசன் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்தன.

இதனால் நடிகர் கமலஹாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அப்போது பேசிய கமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் ஊழல் பெருகி விட்டது என்றும் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழக அமைச்சர்கள் ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசினர்.

கமலின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அரசியலுக்கு வரவும், கருத்து சொல்லவும் ஜனநாயக ரீதியில் அனைவருக்கும் உரிமை உண்டு என தெரிவித்தார்.

இந்நிலையில், கமலின் பேச்சு குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கமலஹாசன் தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதாக பேசினார்.

கமலஹாசனுக்கு பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சண்முகம் பன்னீர்செல்வம் கமலை மட்டுமல்ல தவக்களையை கூட ஆதரிப்பார் என தெரிவித்தார்.