மத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதை பிரதமர் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

டெல்லியில் பிரதமா் மோடி  காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று மாலை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு ஊரடங்கு தளர்வு 2ம் கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆகையால், இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். விதிகளை மீறுவோர்களை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. தளர்வு நேரத்தில் சிறிய தவறு கூட அதிக விளைவுகளை ஏற்படுத்தும். முகக்கவசம் அணியாததால் ஒருநாட்டு தலைவருக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டதை பார்த்தோம். சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டிலும் ஒரே விதிதான். சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றார்.

மேலும், பேசிய அவர் நாட்டில் ஊரடங்கு காலத்தில் யாரும் பசியோடு தூங்க செல்லக் கூடாது என்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே அரசு ஏழைகளுக்ககு 1.75 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்பட்டன. கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ கடலைப்பருப்பும் வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றார். இந்நிலையில், பிரதமர் மோடி நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் அறிவித்துள்ளது ஊரடங்கு நீட்டிப்பையே மறைமுகமாக கூறியதாக சொல்லப்படுகிறது.