அமெரிக்கா, இத்தாலி போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ள நாடுகளிலேயே நிலைமை சமாளிக்க முடியாத சூழலில், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலை தடுக்கா விட்டால், எத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே பெரும் அச்சமாக உள்ளது என இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சீனாவில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா நோய் தோன்றிய வூகான் பல்கலைக்கழகத்தில் படித்து கேரளம் திரும்பிய மாணவி ஒருவர் தான் இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி ஆவார். அதன்பிறகும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அவ்வளவு வேகமாக பரவவில்லை. மார்ச் 3-ஆம் தேதி வரையிலான 33 நாட்களில் இந்தியாவில் மொத்தம் 9 பேர் என்ற ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு இருந்தது. அதன்பின் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 171 பேரை தாக்கியுள்ளது. 

கடந்த 18-ஆம் தேதி 158-ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 298-ஆக அதிகரித்துள்ளது. 19, 20 ஆகிய இரு நாட்களில் மட்டும் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதிலிருந்தே அந்த நோய் எவ்வளவு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கேரளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மராட்டியத்தில் 63-ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரிவதற்கு முன் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர், இன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் துஷ்யந்த்சிங் என்ற மக்களவை உறுப்பினர் நாடாளுமன்ற அலுவல்களிலும், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதனால், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கும் நோய்த்தொற்று இருக்குமோ? என்ற எண்ணத்தில் அவர்களுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வெறும் 10 பேர் மட்டுமே என்று தமிழக அரசால் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 257 பேர் என்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நபர்களுடன் தொடர்பில் இருந்தனரா? என்பது தெரியவில்லை. கொரோனா பாதித்தவர்கள் தங்களை அறியாமலேயே நோயை எவ்வாறு பரப்பக்கூடும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இத்தகைய பாதிப்பை தடுப்பதற்காகவே 3 வார ஊரடங்கை பா.ம.க. வலியுறுத்துகிறது.

உள்நாட்டு நிலைமை இவ்வாறு இருந்தால், உலக நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தொடக்க நிலையிலேயே கொரோனாவை தடுக்கத் தவறிய இத்தாலியில் சாவு எண்ணிக்கை 4050 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் இத்தாலியில் கொரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் நியுயார்க், கலிபோர்னியா மாகானங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள கோடிக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்கா, இத்தாலி போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ள நாடுகளிலேயே நிலைமை சமாளிக்க முடியாத சூழலில், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலை தடுக்கா விட்டால், எத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே பெரும் அச்சமாக உள்ளது. அதனால் தான் வந்த பின் வருந்துவதை விட, வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் இந்தியாவில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாடு அதன் அண்டை மாநிலங்களுடனான எல்லைகளை மூடியிருப்பதும், பிரதமர் அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. இதையே அடுத்த 3  வாரங்களுக்கு நீட்டிப்பது உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்; பொதுமக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.