சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்றது. இதனையடுத்த, மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது வரும் 14ம் தேதியோடு முடிகிறது. தற்போது வைரஸ் கண்டறியும் சோதனைகளில் பலர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். பாதிப்பும் அதிகமாகி வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்களில் இருந்து குரல்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான மாநிலங்களின் முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. முதலில் 19 பேர் கொண்ட இந்த நிபுணர் குழு நேற்று முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது நிபுணர் குழு ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப் பரிந்துரைத்தது. நேற்று முன் தினம் 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் பேட்டி அளித்த முதல்வர், கொரோனா தொற்று 3ம் நிலை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை பிரதமருடன் முதல்வர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, அமைச்சர்களுடன் சுமார் ஒரு மணிநேரம் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், நிவாரண உதவிகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரை கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும், நிவாரண உதவிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் எனத் தெரிகிறது.