Asianet News TamilAsianet News Tamil

அமைச்சரே இப்படி பொய் உரைக்கலாமா? கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு காரணம் ஆயிடாதீங்க.. வேதனையில் அன்புமணி..!

கடலூர் மாவட்டம் எத்தகைய சீரழிவுகளையும், பேரழிவுகளையும் எதிர்கொண்டாலும் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை; என்.எல்.சிக்கு ஆதரவாக செயல்படுவது தான் அரசின் கொள்கை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் அமைச்சரின் பதிலுரை உள்ளது. 

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss
Author
First Published Mar 25, 2023, 1:24 PM IST

என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக தமிழ்நாடு அரசு ஓர் அங்குலம் நிலத்தைக் கூட கையகப்படுத்தாது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு விடையளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் பொய்களை குவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

என்எல்சி நிறுவனம் கேட்டதையெல்லாம் வழங்கும் கற்பகத்தரு போலவும், நிலம் கொடுக்கும் மக்களுக்கு பணத்தையும், வேலைவாய்ப்பையும் வாரி வழங்குவது போன்ற மாயத்தோற்றத்தை அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார். இப்போது கையகப்படுத்தப்படும் நிலங்களில் வேளாண் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடிக்கு அதிகமாகவும், வீட்டு மனைகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 கோடியும் வெளிச்சந்தையில் வழங்கப்படும் நிலையில் என்.எல்.சி வழங்கும் விலை இதை விட பல மடங்கு குறைவாகும். அதேநேரத்தில் என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நிலத்தின் விலை மட்டுமே அல்ல. அதைக் கடந்து கடலூர் மாவட்ட பொதுநலன், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாலை வனமாகும் ஆபத்து என மக்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய பாதிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

என்எல்சிக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் கூறியிருக்கிறார் அமைச்சர். நிரந்தர வேலைவாய்ப்பு என்று அமைச்சர் குறிப்பிடுவது ஏ.எம்.சி (Annual Maintenance Contract) எனப்படும் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தப் பணிகளைத் தான். இது தினக்கூலி பணியை விட மோசமானது. இந்த பணியில் சேருவோருக்கு தினக்கூலி அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும். அதேநேரத்தில் ஒப்பந்த நிறுவனம் நினைத்தால், அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும்.

நிலத்தின் உரிமையாளர்களாக நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வழங்கி வந்த உழவர் பெருமக்களை, ஒரு நாளைக்கு ரூ.150க்கும், ரூ.200க்கும் கையேந்த வைப்பதையா தமது சாதனையாக தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது? இதுவா நிரந்தரப் பணி? என்பதையெல்லாம் தமிழ்நாடு அரசு தான் விளக்க வேண்டும். இன்னொரு தருணத்தில் என்.எல்.சியில் 1711 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அந்த இடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும் 20 மதிப்பெண்களை கூடுதலாக வழங்க என்.எல்.சி முன்வந்திருப்பதாகவும் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். கடலூர் மக்களை இப்படி ஏமாற்றுவதை விட பெரிய மோசடி எதுவும் இருக்க முடியாது.

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

என்.எல்.சி நடத்தும் போட்டித்தேர்வுகளில் மோசடிகளும், முறைகேடுகளும் நடக்கின்றன என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். அதனால் தான் அண்மையில் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாத பணிக்கு 1582 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகளில் 8 பேர் மட்டுமே தமிழகத்திலிருந்தும், மீதமுள்ளவர்கள் பிற மாநிலங்களில் இருந்தும் தேர்தெடுக்கப் பட்டனர். இந்தக் குற்றச்சாட்டை தமிழக அரசோ, அமைச்சரோ மறுக்க முடியாது. ஏனெனில், இது தொடர்பாக 06.02.2021ஆம் நாள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், இதுபோன்ற தேர்வுகள் மூலம் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த பாரபட்சமான தேர்வு முறைக்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், என்.எல்.சி தேர்வை ரத்து செய்யவேண்டும் இல்லையெனில், தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார்.

இப்படியாக, வட இந்தியர்களை மட்டுமே பணியில் சேர்ப்பதற்காக மோசடியாக நடத்தப்படும் தேர்வு என்று தமிழக முதலமைச்சரால் குற்றஞ்சாட்டப்பட்ட என்.எல்.சி தேர்வில், நிலம் கொடுத்தவர்களுக்கு 20 மதிப்பெண்களை கூடுதலாக வழங்குவதன் மூலம் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? நிலம் கொடுத்தவர்களுக்கே இது தான் நிலை என்றால், அந்த நிலத்தில் பணி செய்தவர்களின் எதிர்காலம் என்னவாகும்? தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களை பங்குதாரர்களாக அறிவிக்கும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ள நிலையில், வேலை கூட வழங்க மாட்டோம் என்ற கொள்கையை கடைபிடிக்கும் என்.எல்.சியை எதிர்த்து கேள்வி கேட்காமல், அதன் செய்தித்தொடர்பாளர் வேலையை தமிழக அரசும், அமைச்சரும் செய்து வருவது எந்த வகையில் நியாயம்? இது அவர்களின் மதிப்பை குறைத்து விடாதா?

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

அதேபோல், என்.எல்.சியின் சமூகப் பொறுப்புடைமை (சி.எஸ்.ஆர்) நிதியில் ரூ.100 கோடியை வெளி மாநிலங்களில் செலவிடுவதாக இருந்த நிறுவனத்தின் நிர்வாகம் இப்போது அதை கடலூர் மாவட்டத்திலேயே செலவிட முன்வந்திருப்பதாகவும் அது தங்களின் சாதனை என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். என்.எல்.சியின் முதன்மை முதலீடு நிலக்கரி. அது தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து சுரண்டப்படுகிறது. அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாயில் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான தொகையை வட மாநிலங்களில் என்.எல்.சி முதலீடு செய்திருக்கிறது. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, சி.எஸ்.ஆர் நிதி ரூ.100 கோடியை கடலூர் மாவட்டத்திற்கு செலவிடப் போவதாக என்.எல்.சி கூறுவதையும், தமிழக அரசு அதை நம்புவதையும் பார்த்தால் அழுவதா, சிரிப்பதா? எனத் தெரியவில்லை.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் வட்டங்களில் உள்ள 20&க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொத்தம் 45,000 ஏக்கரில் வீராணம் நிலக்கரித் திட்டம் மற்றும் பாளையம் கோட்டை நிலக்கரித் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. அப்பகுதிகளில் நிலக்கரி வளத்தை ஆய்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அடுத்ததாக கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள அம்பாபுரம், பின்னலூர், மஞ்சக்கொல்லை, தலைக்குளம், நத்தமேடு, வடக்குத் திட்டை, தெற்குத் திட்டை, கிருஷ்ணாபுரம், வண்டுராயன்பட்டு, பூதவராயன்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் 21,000 ஏக்கர் பரப்பளவில் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரி திட்டம் தனியார் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான ஏலத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி விட்டது. இத்திட்டங்களுக்கான ஆய்வுகளுக்கு கடந்த காலத்தில் அனுமதி அளித்ததே தமிழ்நாடு அரசு தான்.

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

ஆனால், அவை அனைத்தையும் மறைத்து விட்டு, இவை குறித்த தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். அவற்றுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிறகு, ஒப்பந்தங்கள் தான் கோரப்படுகின்றனவே தவிர, அரசு நிலம் எடுக்கப்போவதில்லை என்கிறார். அடுத்த வினாடியே, நிலம் எடுக்கும் பேச்சு இப்போதைக்கு இல்லை என்கிறார். மக்கள் நலனை பாதிக்கும் முக்கிய சிக்கலில் ஒரு நிமிடத்திற்குள்ளாக 3 விதமான நிலைப்பாடுகளை தங்கம் தென்னரசு எடுக்கிறார் என்றால், இந்த சிக்கலில் அவரும், அரசும் எவ்வளவு தடுமாற்றத்தில் உள்ளனர் என்பதை அறியலாம். மாண்புமிக்க சட்டப்பேரவையில் இந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் கூறக்கூடாது.

நிறைவாக என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், பாதிப்புகளும் என்னென்ன? என்பதை அமைச்சர் அறிந்திருக்கவில்லை; அல்லது அறிந்திருந்தும் அறியாதவரைப் போல நடிக்கிறார் என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது. என்.எல்.சி நிறுவனம் மட்டும் இல்லாவிட்டால் தமிழ்நாடு மாநிலமே இருளில் மூழ்கி விடும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் முயன்றுள்ளார். இது முற்றிலும் தவறு ஆகும். தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்தேவை 18,000 மெகாவாட் ஆகும். அதில் என்.எல்.சியின் நான்கு மின்னுற்பத்தி நிலையங்களின் மூலம் முறையே 623 மெகாவாட், 208 மெகாவாட், 248 மெகாவாட், 654 மெகாவாட் என அதிகபட்சமாக 1733 மெகாவாட் மின்சாரம் கிடைக்கக் கூடும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் இதில் 1000 முதல் 1200 மெகாவாட் மட்டுமே கிடைக்கும். இந்த மின்சாரம் தடைபட்டால் அதை எளிதாக சமாளிக்கலாம்; தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

தமிழ்நாட்டில் இப்போது பணிகள் நடைபெற்று வரும் அனல்மின்திட்டப் பணிகளை ஓராண்டிற்குள் முடித்தால் 5000 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைப் போன்று 2030&ஆம் ஆண்டுக்குள் ரூ.77 ஆயிரம் கோடியில் 14,500 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறி விடும். அத்தகைய சூழலில் என்.எல்.சி மின்சாரம் தமிழகத்திற்கு தேவையில்லை. என்.எல்.சி வழங்கும் 1000 மெகாவாட் மின்சாரத்திற்காக கடலூர் மாவட்ட மண்ணின் வளத்தையும், மக்களின் வளத்தையும் அடகு வைப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பான செயலாகும். இதை அரசு செய்யக்கூடாது.

இவை அனைத்தையும் கடந்து என்.எல்.சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், பாதிப்புகள் குறித்த எந்த வினாவிற்கும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளிக்கவில்லை. இயற்கை வளங்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதும் என்.எல்.சி நிறுவனம் நடத்தும் தாக்குதல் மிகவும் கொடியது. அதனால், ஒருபுறம் நிலத்தடி நீர்மட்டம் 10 அடியிலிருந்து 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது; மறுபுறம் மழைக்காலங்களில் என்.எல்.சி வெளியேற்றும் நீர் வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும் வெள்ளக்காடாக்குகிறது. நிலக்கரி சுரங்கங்களில் இருந் து சல்பர் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்கள் வெளியேறுவதாலும், நிலக்கரியை கொண்டு செல்லும் போது அது பறப்பதாலும், அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பலாலும் மக்களுக்கு பலவகை நோய்களும், சுற்றுச்சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் கடந்த பல ஆண்டுகளாகவே என்.எல்.சியால் ஏதோ ஒரு வகையில் பாதிப்புகளுக்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை பல்வேறு ஆய்வுகளும், அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன.என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேறும் கரியமில வாயு புவிவெப்பமயமாதலை விரைவுபடுத்துகிறது. ஆனால், இதுகுறித்தெல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு எதையும் கூறாமல் அமைதியாக கடந்து செல்கிறார்.

கடலூர் மாவட்டம் எத்தகைய சீரழிவுகளையும், பேரழிவுகளையும் எதிர்கொண்டாலும் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை; என்.எல்.சிக்கு ஆதரவாக செயல்படுவது தான் அரசின் கொள்கை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் அமைச்சரின் பதிலுரை உள்ளது. என்.எல்.சியின் நிலப்பறிப்புக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய முழு அடைப்புக்கு 90% வணிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். உலக தண்ணீர் நாளையொட்டி மார்ச் 22ஆம் நாள் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் 300க்கும் கூடுதலான இடங்களில் என்.எல்.சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. என்.எல்.சிக்கு எதிரான கடலூர் மாவட்ட மக்கள் எந்த அளவுக்கு கொந்தளித்துக் கிடக்கின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன. ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் காயங்களையும், வலிகளையும் கண்டுகொள்ளாமல் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆதரவளிப்பது நியாயமல்ல.

Cuddalore district should not be supported by DMK government... anbumani ramadoss

தமிழ்நாடு அரசை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வதெல்லாம், கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு தமிழ்நாடு அரசு தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவளிக்கக் கூடாது என்பதைத் தான். கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக தமிழ்நாடு அரசு ஓர் அங்குலம் நிலத்தைக் கூட கையகப்படுத்தாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிக்க வேண்டும். என்.எல்.சியை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios